கேரளாவில் உருவாகி தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் வழியாக தூத்துக்குடிக்கு வடக்கில் மன்னார் வளைகுடாவில் கலக்கிறது வைப்பாறு. சாத்தூரில் இந்த வைப்பாற்றுப் பகுதியில் ‘மணல்மேட்டுச் சங்கமம்’ எனப்படும் மணல்மேட்டுத் திருவிழாவை, தைப்பொங்கலுக்கு மறுநாளான கரிநாளான இன்று, மதபேதமின்றி மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு ஆதாரமாக வைப்பாறு திகழ்ந்தாலும், பாரம்பரியமான ஒரு கலாச்சாரம், இங்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்தினர் கறிச்சோறு கொண்டுவந்து, இங்கே மணல்மேட்டில் உட்கார்ந்து ஒன்றுகூடி சாப்பிடுகின்றனர். கரும்பு கடித்து, பனங்கிழங்கை உரித்துத் தின்று, இன்றைய தினம் ஆற்றுப்பகுதியில் முளைத்த திடீர் கடைகளில் குழந்தைகளுக்கு பண்டங்களை வாங்கித் தந்து, அவர்களுடன் விளையாடுகின்றனர். பகலில் ஆரம்பித்து இரவு வரை நீடிக்கிறது இத்திருவிழா.
தொன்றுதொட்டு தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவரும் அடையாளங்களில் ஒன்றுதான் இந்த மணல்மேட்டுத் திருவிழா!