kenya students chennai high court

Advertisment

சக நாட்டைச் சேர்ந்த முதுகலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கென்யாவைச் சேர்ந்த மாணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கென்யா நாட்டைச் சேர்ந்த எரிக் முலின் துலி, மேற்படிப்புக்காக மும்பை வந்தபோது, கென்யாவைச் சேர்ந்த மாணவி ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர், இருவரும் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மேற்படிப்பில் சேர்ந்து, தனித்தனி அறைகளில் தங்கி படித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2016- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்,அம்மாணவியின் வீட்டுக்குள் நுழைந்த எரிக், அவரைக் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ய முயற்சித்தபோது, அம்மாணவி தப்பி சென்று, சேலம், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட எரிக் மீதான வழக்கை விசாரித்த சேலம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து 2019- ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து எரிக் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, எரிக் மீதான குற்றச்சாட்டுகளை, காவல்துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகக்கூறி, அவரைக் குற்றவாளி எனத் தீர்மானித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்தது. அதேசமயம், அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, 10 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டது.