லஞ்ச ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் ‘அறப்போர்’ இயக்கத்தின் ‘கேளு சென்னை கேளு’ போராட்டம் சென்னையில் மட்டுமல்ல… தமிழகத்திலும் வைரலாக பரவ இருக்கிறது.
தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதால் மக்கள் வாடி வதங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும், தலைநகரான சென்னையில் தண்ணீர் கிடைக்காமல் தினம் தினம் மக்கள் இரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு குடம் மெட்ரோ வாட்டர்கூட கிடைக்காமல் வீதிகளில் லாரிகளை சூழ்ந்து அலைமோதிக்கொண்டிருக்கும் சூழலில் இனியும் யாரோ ஒரு ஹீரோ வந்து உங்களைக் காப்பாற்றுவார் என்று நம்பிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? அந்த ஹீரோ நீங்கள்தான். சென்னையின் நீர்நிலைகளை காப்பாற்ற அறப்போர் இயக்கத்துடன் இணையுங்கள். உங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு நீங்கள் செய்ய இருக்கும் மிக முக்கியமான உதவி இதுவாகத்தான் இருக்கும்’
‘முதல்வருக்கு ஒருநாளைக்கு மூன்று லாரி தண்ணீர்… பொதுமக்களுக்கு ஒருநாளைக்கு இரண்டு குடம்தானா?’
‘என் தண்ணீர் எங்கே?’
என்ற வாசகங்களுடன் ‘கேளு சென்னை கேளு’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியதோடு அதுகுறித்து வரும் 30 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வள்ளுவர்கோட்டம் அருகில் சமூக செயற்பாட்டாளர்கள், பெண்கள், பள்ளிக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போராட்டத்தை நடத்த இருப்பதால் தண்ணீர் பஞ்சத்தில் இருக்கும் தமிழக மக்களிடம் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது ‘கேளு சென்னை கேளு’ போராட்டம்.
ஆனால், இந்தப்போராட்டத்திற்கு திடீரென்று சென்னை மாநகரக் காவல்துறை அனுமதி மறுத்தத்தால் போராட இருந்த பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அறப்போர் இயக்கத்தின் சார்பாக நீதிமன்றத்தை நாடியதால்… வரும்- 30 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கவிருக்கும் ‘கேளு சென்னை கேளு’ போராட்டத்திற்கு தடைவிதிக்கக்கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
போராட்டத்திற்கு அனுமதி வாங்குவதே போராட்டமாகிவிட்டதே என்று அறப்போர் இயக்கத்தின் செயலாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் நாம் பேசியபோது, “கேளு சென்னை கேளு என்பதில் இரண்டு ’கேளு’ இருக்கிறதல்லவா? நீங்க அரசை கேளுங்க…. அரசுக்கிட்ட மக்கள்கிட்ட காதுகொடுத்து கேளுங்க. அதாவது, தண்ணீர் பஞ்சம் குறித்து அரசாங்கத்திடம் பொதுமக்களை கேள்வி கேட்கவைப்பது, பொதுமக்கள் சொல்வதை அரசு அதிகாரிகளே ‘கேளு’ங்கள் என்று கேட்கவைப்பது.
தமிழகத்தில் பல பகுதிகளில் எப்படி தண்ணீருக்காக மக்கள் கஷ்டப்படுகிறார்கள்? என்பதை அந்தந்த பகுதி மக்களே வந்து சொல்வது… தண்ணீர் பிரச்சனையிலிருந்து தீர்வை நோக்கி மக்களே ஒன்று சேர்ந்து பல இடங்களில் நீர்நிலைகளுக்கு பொறுப்பெடுத்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து சீரமைக்கவைக்க வைப்பதுதான் கேளு சென்னை கேளு போராட்டத்தின் நோக்கம்.
குறிப்பாக, பொதுப்பணித்துறை, சென்னை மாநாகராட்சி, சென்னை குடிநீர் வாரியம் (மெட்ரோ வாட்டர்) உள்ளிட்ட துறை அதிகாரிகளிடம் கேள்வி கேட்கவைக்கப்போகிறோம். மேலும், ஒவ்வொரு மழைத்துளிக்கும் அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும். எவ்வளவு சதவீதம் நிலத்தடி நீர் சேமிக்கப்படுகிறது? குளம் குட்டைகளில் எவ்வளவு சதவீதம் நீர் சேமிக்கப்படுகிறது? எவ்வளவு சதவீதம் நீர் கடலுக்கு அனுப்புகிறார்கள்? என்பதற்கான கணக்கை எடுத்து மக்களிடம் தெரிவிக்கவேண்டும். கழிவுநீரை சுத்திகரித்து நீர்நிலைகளில் விடவேண்டும். நீர் சுழற்சியை அதிகப்படுத்தும் மரம் நடுவதில் ஆரம்பித்து மழை வரும்வரைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அதை எப்படி சேமிக்கவேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்படும்.
முதலில், 30- ந்தேதி ஒருநாள் உண்ணாவிரதப்போராட்டத்திற்குதான் கடந்த 17 ந்தேதி அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், சென்னை காவல்துறையோ, ‘அரசு தடையில்லா தண்ணீர் கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுத்துக்கொண்டிருக்கிறது. இன்னொரு இயக்கமும் அதே, தேதியில் போராட்டம் நடத்த விண்ணப்பித்திருக்கிறார்கள். மேலும், அறப்போர் இயக்கத்தின் மீது வழக்குகள் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்’ என்ற காரணங்களைக் கூறி போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டது.
இதனைத்தொடர்ந்து, ஏற்கனவே நாங்கள் பெற்ற தீப்பின் அடிப்படையில் அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தை நாடினோம். அப்போது, ‘ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் நீர்நிலைகள் தொடர்ந்து அழிக்கப்பட்டதன் காரணம்தான் தண்ணீர் பஞ்சத்திற்குக்காரணம் என்ற விழிப்புணர் ஏற்படுத்துவதன் மூலமாகத்தான் தீர்வு கிடைக்கும். மக்களுக்கு இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அறப்போர் இயக்கம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதால் போராட்டத்திற்கு தடை விதிக்கமுடியாது’ என்று உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். அதனால், வரும் 30 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து மதியத்திற்குள் ‘கேளு சென்னை கேளு’ விழிப்புணர்வு போராட்டம் எந்த தடையும் இல்லாமல் நடக்கும். எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறதோ அவர்கள் அனைவரும் இந்தப்போராட்டத்தில் கலந்துகொள்ளலாம்” என்றழைக்கிறார் அவர்.
‘கேளு சென்னை கேளு’ விழிப்புணர்வு போராட்டம் சென்னைக்கான போராட்டம் அல்ல… ஒட்டுமொத்த தமிழகத்திற்கான போராட்டம் என்பதால் ‘கேளு தமிழகமே கேளு’ என்றும் விஷ்வரூபம் எடுக்கப்போகிறது.