தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (26/08/2021) பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் குழந்தைகளின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தை எழுத்தாளர்களுக்கு 'கவிமணி' விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் 18 வயதிற்கு உட்பட்ட 3 சிறந்த எழுத்தாளர்களை கண்டறிந்து கவிமணி விருது, 25 ஆயிரம் ரொக்கப் பரிசு, கேடயம் வழங்கப்படும். அதேபோல் அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு, கல்வித்தரம், பெற்றோர்களின் மேம்பாடு என குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக சிரத்தை எடுத்து பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்கள், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.