Skip to main content

பட்டியலின இளைஞருக்கு அனுமதி மறுப்பு; கோவிலுக்கு சீல் வைத்த ஆர்டிஓ

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

karur veeranam patti kaliamman temple sealed incident 

 

கோவிலில் பட்டியலின இளைஞரை உள்ளே விட மறுத்த விவகாரத்தில் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

கரூர் மாவட்டம் கடவூர் அருகே வீரணம்பட்டியில் வீரணம்பட்டி, கரிச்சபட்டி, கொள்ளுதண்ணிப்பட்டி, சரக்கம்பட்டி, மாலப்பட்டி, கீழ ஆணை கவுண்டம்பட்டி, வீரகவுண்டம்பட்டி ஆகிய எட்டு ஊர்களுக்கு பொதுவான ஸ்ரீ காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தற்போது வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது.  திருவிழாவில் அதே ஊரைச் சேர்ந்த பட்டியலின இளைஞரை கோவிலில் நுழைய குறிப்பிட்ட சமூகத்தினர் அனுமதி மறுத்துள்ளனர்.

 

இதனால் அங்கு நேற்று முன்தினம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நேற்றும் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவி தலைமையிலான வருவாய்த்துறையினர், குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான காவல்துறையினர் ஆகியோர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

ஆனால் குறிப்பிட்ட சமூகத்தினர், கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து வருவாய்த் துறையினர் கோவிலின் கதவினை இழுத்துப் பூட்டி சீல் வைத்தனர். இதனால் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்டிஓ வின் காரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்ட சம்பவம் வீரணம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்