தர்மபுரி மாவட்டம் நல்லப்பட்டியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரின் மகள் மோனிகா (வயது 20) கடந்த ஓராண்டுக்கு முன்பாக தனியார் கல்லூரியில் படித்து வந்த மோனிகா, தனது தோழி வீட்டுக்கு சென்று வரும் போது, திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் ஸ்ரீராமசமுத்திரம் காவேரி நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் மணிகண்டன் (வயது 25) என்பவருடன் செல்போன் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பானது காலப்போக்கில் செல்போன் வழியாக காதலாக மாறியுள்ளது. கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் சந்தித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதனை மோனிகா தனது வீட்டில் தெரிவித்துள்ளார். இதற்கு அவரின் வீட்டில் இருந்த தந்தை மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய மோனிகா, மணிகண்டனை திருமணம் செய்து கொண்டு, தர்மபுரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கு போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் காதலனுடன் தான் செல்வேன் என்று பெற்றோருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு மணிகண்டனுடன் சென்றுள்ளார். மணிகண்டன் கரூரில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால், மோனிகாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே எந்த விதமான தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. மணிகண்டன் மற்றும் மோனிகா காட்டுப்புத்தூர் தவிட்டுப்பாளையம் பார்பர் காலனியில், வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மோனிகா கர்ப்பமாகி உள்ளார். இரண்டு மாத கர்ப்பிணியான அவர், தான் குடியிருந்த வாடகை வீட்டில் மின்விசிறிக்கான கொக்கியில் கணவரின் வேட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த முசிறி டிஎஸ்பி யாஸ்மின், முசிறி இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான காட்டுப்புத்தூர் போலீசார் மோனிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து காவல் நிலையம் வந்த மோனிகாவின் தந்தை முனிராஜ் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்துள்ளார். இரண்டு மாத கர்ப்பிணியாக தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்ட மோனிகாவிற்கு திருமணம் நடந்து ஓர் ஆண்டு மட்டுமே ஆவதால் ஆர்.டி ஓ விசாரணை நடைபெற உள்ளது.