கரூரில் விவசாய பாசன கிணற்றில் வாலிபர் ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி பகுதி, தெற்கு மாடு விழுந்தான் பாறையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பாண்டியன் (வயது 40). இவருக்கு திருமணம் ஆகி செண்பக ஈஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் பாண்டியன் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணியளவில் வீட்டை விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பல இடங்களில் பாண்டியனை உறவினர்கள் தேடி வந்த நிலையில், பாண்டியன் தெற்கு மாடு விழுந்தான் பாறை அருகே மேற்கு பகுதியில் உள்ள விவசாய பாசன கிணற்றில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் சடலமாக மிதப்பதாக அந்த பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்துள்ளனர்.
இந்த சம்பவம் அறிந்த குளித்தலை போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் உடலில் காயங்களுடன் சடலத்தை மீட்டனர். மேலும் சடலத்தை கைப்பற்றிய குளித்தலை போலீசார் உடற்கூறு ஆய்விற்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாண்டியன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.