திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தையும், அண்ணாமலையார் கோயிலுக்குள் நடைபெறும் தீப உற்சவத்தை கோயிலுக்குள் இருந்தபடி தரிசிக்க வேண்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடந்த காலங்களில் பக்தர்கள் சுலபமாக தரிசனம் செய்தனர். ஆனால் தற்போது 25 ஆண்டுகளாக பௌர்ணமி, கார்த்திகை தீப திருவிழா தென்னிந்தியா முழுவதும் பரவியதால் பக்தர்களின் வருகை லட்சங்களில் அதிகரித்ததால் பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டு காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த துவங்கியது.
மகாதீபத்தை காண மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், காவல்துறை இணைந்து 6 ஆயிரம் பக்தர்களை மட்டும்மே அனுமதிக்கிறது. இப்படி அனுமதிக்க கடந்த காலங்களில் பாஸ் நடைமுறை இருந்தது. அதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்ததால் பாஸ் வழங்குவதில் சில கட்டுப்பாடுகளை விதித்தது நீதிமன்றம். அதன்படி கோயில் கட்டளைதாரர்கள், உபயதாரர்களுக்கு பாஸ் வழங்குவது, இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த ஊழியர்கள், காவல்துறையினர், மாவட்ட நிர்வாகம், பத்திரிக்கையாளர்களுக்கு டூட்டி பாஸ் வழங்குவது, சாமி தூக்குபவர்கள், கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியர்களுக்கு, கோயில் பணியாளர்கள் பாஸ் வழங்குகின்றனர். மேலும், நீதிபதிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு புரோட்டாக்கால் படி அனுமதி வழங்கப்பட்டது.
இந்த தரப்பினர் மட்டும் 3 ஆயிரம் பேர் என்றும், மற்றவர்களை பொது தரிசனத்தில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் கோயிலுக்குள் அனுதிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி முடிவு செய்யப்பட்டாலும், பொது தரிசனத்தில் பொதுமக்களை அனுமதிப்பதில் காவல்துறை பாரபட்சம் காட்டுகிறது கடந்த கால குற்றச்சாட்டு.
அதனை சுட்டிக்காட்டியும் போலீஸார் மாற்றிக்கொள்வதில்லை. டிசம்பர் 10ந்தேதி விடியற்காலை கோயிலுக்குள் அண்ணாமலையார் சந்நதிக்குள் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை காண டிசம்பர் 9ந்தேதி இரவு 8 மணியில் இருந்து பொது தரிசனத்தில் பக்தர்கள் காத்துக்கிடந்தனர். ஆனால் சில நூறு பேர்களை மட்டும்மே பொது தரிசனத்துக்கு அனுமதித்தது காவல்துறை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து முக்கிய பிரமுகர்களுக்கு தரும் முக்கியத்துவத்தை, பொதுமக்களுக்கும் தாருங்கள் என்கிற கேள்வியை பக்தர்கள் அன்று எழுப்புகின்றனர்.