ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாகத் திருவண்ணாமலையில் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வ உதயநிதி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் சொல்லி குறைகளை கேட்டறிந்தனர். மேலும், தமிழக அரசு சார்பில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
அந்த வகையில் நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் திருவண்ணாமலை நிலச்சரிவால் உயிரிழந்த உறவினர்களுக்கு தனது எக்ஸ் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்து புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது கட்சி தலைமை அலுவலகத்தில் நிவாரண உதவி வழங்கினார். அதனை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக ரூ. 10 லட்சம் வழங்கினார்.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக நடிகர் கார்த்தி நிதியுதவி அளித்துள்ளார். கனமழை பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் விதமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். அதற்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதியை நேரில் சந்தித்து வழங்கினார்.