கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 606 லிருந்து 657 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 26 பேரில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மதுரையில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் நேற்று (25/03/2020) அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தார். கரோனா வார்டில் இருந்த 40 வயதான நபருக்கு மூளைக்காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு இருந்துள்ளது. இறந்த நபரின் சளி, ரத்த மாதிரிகள், நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே அவரது இறப்பிற்கான காரணம் தெரிய வரும்.
உயிரிழந்த நபர் கோடிமுனை பகுதியைச் சேர்ந்தவர். இவர் குவைத் சென்று கடந்த 3- ஆம் தேதி தான் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே கரோனா பாதிப்பில்லாத 59 வயதான பெண் இறந்தார்.