நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் வருவதால் தான் மத்திய அரசு சிலிண்டர் விலையைக் குறைத்துள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, சிலிண்டர் விலையை முன்கூட்டியே குறைத்திருக்க முடியும்; ஆனால் தேர்தல் வரும் சமயத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மகளிர் தினத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர். பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும் தான் கவலையா? பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது போன்ற பல விஷயங்களை செய்யலாம். அதைவிட்டு விட்டு பெண்களை சமையல் அறையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயமாக இதை மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.