Kanchipuram Govt Hospital Treat patient with a glucose bottle on a mop stick

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி அருகாமையில் உள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. காய்ச்சலுக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு எனத்தனித்தனி வார்டுகள் உள்ளன. காய்ச்சலுக்கான ஆண்கள் வார்டில் 10 படுக்கைகளும், பெண்கள் வார்டில் 12 படுக்கைகளும் மட்டுமே உள்ளன. இதனால் வைரல் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என வருபவர்களுக்கு, டெங்குக்கான வார்டோ, கொரோனா தொற்றுக்கானதனிப்பிரிவோ இல்லாததால், அந்த நோயாளிகளை பொது வார்டில் வைத்து சிசிச்சை அளிக்கும் நிலை உள்ளது. இதனால் பொதுவார்டில் இருப்பவர்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.

மேலும் இந்த காய்ச்சலுக்கான வார்டுகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது. இந்த காய்ச்சலுக்கான வார்டில் உள்ள படுக்கைக்கு அருகே "குளுக்கோஸ் ஏற்றுவதற்குரிய தனி ஸ்டேண்ட் பொருத்தாமல், தரையை பெருக்க உபயோகப்படுத்தும் துடைப்பத்தின் (தரையைத்துடைக்கப் பயன்படுத்தும் மாப்) அடிக்குச்சியை கட்டிலுடன் சேர்த்து கம்பி வைத்துக் கட்டி ஸ்டாண்டாக பயன்படுத்தி குளுக்கோஸ் ஏற்றப்படும் அவல நிலை உள்ளது. மேலும் சில இடங்களில் சுவிட்சுகள் பெயர்ந்துதொங்கிய நிலையில் உள்ளதால் நோயாளிகள் மீது மின்சாரம் பாயும் அபாயமும் உள்ளது.

Advertisment

சமீபநாட்களாக மருத்துவனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் பலர் கடுமையான காய்ச்சலுடன் வருகின்றனர். இவர்களில் பலரைஉள் நோயாளிகளாக தங்க வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.ஆனால் காய்ச்சல் வார்டில் படுக்கை இல்லாமல் பொது வார்டில் அனுமதிக்கப்படுவதால் பொது வார்டுக்கு வரும் இதய நோயாளிகள், சிறுநீரகப் பிரச்சினையுடன் வரும் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதாக இங்கு வரும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் முகாமில் போதிய உபகரணங்கள் இன்றி அனுமதிக்கப்படும் நபர்களுக்குகுளுக்கோஸ் பாட்டில் தொங்க விடுவதற்கு உபகரணங்கள் இன்றி தரை துடைப்பான் குச்சி கொண்டு குளுக்கோஸ் பாட்டில் ஏற்றப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது எனச் சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.