Skip to main content

கனகராஜ் மர்ம மரணம்: சிறையில் இருக்கும் ராமேஷ்க்கு திடீர் உடல்நலக் குறைவு! 

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

Kanagaraj mysterious death; Ramesh in jail suddenly falls ill!
                                                   கோப்புப் படம் 

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகிய இருவரும் கனகராஜின் மர்ம மரணம் வழக்கில் கைது செய்யப்பட்டு கூடலூர் கிளைச் சிறையில் உள்ளனர். இதில், கனகராஜின் உறவினர் ரமேஷ்க்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

 

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணை ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்தக் கொலை, கொள்ளை வழக்கிற்கு மூல காரணமாக இருந்த கார் ஓட்டுநர் கனகராஜ், சேலத்தில் விபத்தில உயிரிழந்தார். இந்த வழக்கையும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அதில், கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினரான ரமேஷ் ஆகிய இருவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். 

 

அதில், கொடநாடு கொள்ளை சதித் திட்டம் குறித்து தனபாலுக்கு தெரிந்திருந்த நிலையில், போலீஸ் விசாரணையின்போது தெரிவிக்காமல் மறைத்தது, கனகராஜின் செல்ஃபோன் பதிவுகளை அழித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் தனிப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல், கனகராஜின் உறவினர் ரமேஷ் மீது அதே குற்றங்களுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூடலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதில் தனபாலுக்கு 11 நாள் போலீஸ் காவலில் விசாரணையும், ரமேஷ்க்கு 10 நாள் விசாரணையும் முடிந்தன. இருவரையும் குன்னூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் நீதிமன்ற காவலில் கூடலூர் கிளைச் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போது இருவரும் கூடலூர் கிளைச் சிறையில் உள்ளனர்.

 

இந்நிலையில், கூடலூர் கிளைச் சிறையில் உள்ள கனகராஜின் உறவினர் ரமேஷ்க்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதனால், அவரை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக சிறைத்துறையினர் அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உதகையில் உள்ள அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து சிறைத்துறையினர் ரமேஷை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்