ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிக்கும் இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக அங்கு நடைபெற்று வந்தது. பிரமாண்டமான வகையில் செட் அமைக்கப்பட இருந்ததால் அதற்கான பணிகளில் இரவு பகலாக ஊழியர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த எதிர்பாராத விபத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் அந்த திரைப்படத்தின் கதாநாயகன் கமல்.
சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மூவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது,
சினிமா தொழிலில் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்க மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தின் போது நான் மயிரிழையில் உயிர் தப்பினேன். அப்படி அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்திருந்தால் நானும் அந்த அறையில் இருந்திருக்ககூடும். படப்பிடிப்பில் கடைநிலை ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாதது அவமானம். இந்த விபத்தை என் வீட்டில் நிகழ்ந்த விபத்தாகவே கருதுகிறேன் என கூறிய கமல்ஹாசன் உயிரிழந்த 3 பேரின் குடும்பதிற்கு 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.