ஜூன் 12- ஆம் தேதி அன்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார். அதைத் தொடர்ந்து கல்லணையை வந்து சேர்ந்த தண்ணீரை அமைச்சர்கள் தண்ணீர் திறந்தனர். இந்நிலையில் கல்லணை கால்வாயில் கடந்த சில வருடங்களாகவே தண்ணீர் திறந்து சில நாட்களிலேயே உடைப்பு ஏற்படுவது வழக்கமாக இருந்தது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தஞ்சை பகுதியில் சில இடங்களில் பெரிய உடைப்புகள் ஏற்பட்டு பிறகு தண்ணீரை நிறுத்தி கால்வாய் கரை உடைப்பு சரி செய்யப்பட்டது.
அதேபோல் கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம், வேம்பங்குடி கிழக்கு பகுதியில் 10 மீட்டர் நீளத்திற்கு கரை உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 மணி நேரம் விவசாயிகளும், அதிகாரிகளும் போராடி உடைப்பை சரி செய்தனர். இந்த உடைப்பிற்கு காரணம் பிரதான சாலையாக உள்ள கல்லணை கரையில் எலி ஓட்டை போட்டதாக அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர்.
அதனால் இந்த வருடம் முதலில் குறைவான அளவே தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடை வரை தண்ணீர் சென்றுள்ளது. ஜூன் 21- ஆம் தேதி இரவு தஞ்சாவூர் மாவட்டம், ஆவணம் பகுதிக்கு கல்லணைத் தண்ணீர் வந்து பழையநகரம், மாவடுகுறிச்சி வழியாக பேராவூரணி பகுதிக்கு செல்லும் ஆனந்தவள்ளி வாய்காலில் தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் பழையநகரம் பகுதியில் இன்று (24/06/2021) அதிகாலை குத்துப்பாலத்தில் மின் கம்பம் நடப்பட்டிருந்த இடத்தில் உடைப்பு ஏற்பட்டு பலமணி நேரம் தண்ணீர் வெளியேறியது. மேலும், மின்கம்பம் சாய்ந்ததோடு வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள காட்டாற்றில் குமிழி போல வெளியேறி ஓடியது. பல மணி நேரத்திற்கு பிறகு தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக உடைப்பை சரி செய்துள்ளனர். இதனால் தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இப்படி உடைப்பு ஏற்படும் இடங்களில் தற்காலிகமாக மணல் மூட்டை அடுக்குவதுடன் தண்ணீர் நிறுத்தப்பட்டவுடன் பலமாக சரி செய்யாமல் சரிந்த மணல் மூட்டைகள் மேலேயே சில மணல் மூட்டைகளை அடுக்கி வைப்பதால் மேற்பனைக்காடு உள்ளிட்ட இடங்ளில் ஆபத்தான நிலையிலேயே கரைகள் உள்ளது. இதனால் தண்ணீர் வெளியேற்றும் அளவு குறைக்கப்படுவதால் பாசனத்திற்கும், கண்மாய்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கமாக உள்ளது.