Skip to main content

கலப்பு திருமணத்தில் காத்திருந்த அதிர்ச்சி; தந்தையின் கனவை நிஜமாக்கிய மகன்

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

kallakurichi peruvangur marriage and father incident 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் அய்யம்மாள். இவரது கணவர் ராஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்த நிலையில் அவரது இறுதிச் சடங்கு இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.

 

இந்நிலையில், தனது மகன் பிரவீன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசையுடன் வாழ்ந்து வந்த ராஜேந்திரன் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அடுத்த வாரம் மார்ச் 27 ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் ராஜேந்திரன் திடீரென உயிரிழந்ததும், தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தந்தையின் சடலம் முன்பு பிரவீன் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த சொர்ணமால்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரவீன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த சொர்ணமால்யா என்பவரும் வேலை செய்து வந்துள்ளார்.  இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதுகுறித்து சொர்ணமால்யாவின் பெற்றோருடன் சந்தித்து இருவரும் சம்மதம் பெற்றனர். அதேபோல் பிரவீன் தனது தந்தை ராஜேந்திரன் தாய் அய்யம்மாள் ஆகிய இருவரிடமும் சம்மதம் பெற்று திருமண நிச்சயதார்த்தம் முறைப்படி நடந்துள்ளது. பிரவீனும், சொர்ணமால்யாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.