கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெய்சங்கர், தமிழ்ச்செல்வி தம்பதியர். தமிழ்ச்செல்வி அந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவியில் உள்ளார். இவரது மகன் ஜெகன் ஸ்ரீ (வயது 19). இவர் வேப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெகன் ஸ்ரீ இரவு அதிக நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. ஜெகன் ஸ்ரீயை பல்வேறு இடங்களுக்கும் உறவினரின் வீடுகளுக்கும் சென்று தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை ஜெய்சங்கர் வரஞ்சரம் காவல் நிலையத்தில் மகனைக் காணவில்லை எனப் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே ஊரைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 32), அபிலரசன் (வயது 25), ஆகாஷ் (வயது 20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜெகன் ஸ்ரீயை அப்பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் கொலை செய்து புதைத்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கடந்த கார்த்திகை தீபத்தின் போது ஊரில் திருவிழா நடந்தது. அப்போது ஐயப்பன், ஜெகன் ஸ்ரீ ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜெகன் ஸ்ரீ ஐயப்பனை பலர் முன்னிலையில் அடித்துள்ளார். தன்னை விட வயதில் சிறியவன் தன்னை பலர் முன்னிலையில் அடித்ததை ஐயப்பன் பெருத்த அவமானமாகக் கருதியுள்ளார். இதற்காக ஜெகன் ஸ்ரீயை பழிவாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டிய ஐயப்பன் ஜெகன் ஸ்ரீ மீது விரோதத்தில் இருந்த இளைஞர்களை ஒன்றிணைத்து, கள்ளக்குறிச்சிக்கு சென்று மது பாட்டில்கள், கொலை செய்வதற்கான கத்தி போன்ற ஆயுதங்களை வாங்கி வந்துள்ளனர்.
இதையடுத்து முன்விரோதத்தை வெளிக்காட்டாமல் ஜெகன் ஸ்ரீயை மது குடிக்க வருமாறு அழைத்துள்ளனர். அவரும் பகையை மறந்து அவர்களுடன் காப்புக்காடு வனப்பகுதிக்கு மது குடிக்கச் சென்றுள்ளார். அளவுக்கதிகமான மதுவை ஜெகன் ஸ்ரீயை குடிக்க செய்து அவர் நிலைதடுமாறி தள்ளாடிய நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட நால்வரும் பீர் பாட்டிலால் ஜெகன் ஸ்ரீ தலையில் அடித்தும் கத்தியால் அவரது கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர். அவர் உடலில் உயிர் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதே இடத்தில் குழி தோண்டி உடலை புதைத்தனர். இதை ஐயப்பன் தலைமையிலான நால்வரும் போலீசாரிடம் வாக்குமூலம் ஆக அளித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் நால்வரையும் அழைத்துச் சென்று காப்புக்காட்டில் ஜெகன் ஸ்ரீ புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டச் சொல்லி, அந்த இடத்தில் தோண்டி உடலை வெளியே எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்த வரஞ்சரம் உதவி காவல் ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் குற்றவாளிகள் நால்வரையும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பெயரில் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவனை மட்டும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர். திருவிழா தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கல்லூரி மாணவனை கொலை செய்து காட்டில் புதைத்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.