Skip to main content

நகராட்சி பூங்காவில் பேனா! அடுத்த மாதம் திறப்பு விழா

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Kalaignar's pen statue in puthukottai park

 

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவிடம் அருகே கடலுக்குள் உயரமான பேனா சிலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திய போது சீமான் உள்பட பலரும், ‘கடல் வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கும். அதனால் கடலுக்குள் பேனா சிலை வைக்க கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர். சீமான், “சிலை வைக்கக் கூடாது என்று போராடுவேன். மீறி பேனா சிலை வைத்தால் உடைப்பேன்” என்றார். இதன் பிறகு தொடர்ந்து பொதுமக்களிடம் பேனா பேசுபொருளாகி உள்ளது.

 

இந்த நிலையில், புதுக்கோட்டை நகரில் (கே.கே.சி) அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி எதிரில் உள்ள 5 ஏக்கர் காலி இடத்தில் பூங்கா அமைக்க கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிப்பு வெளியாகி பணிகள் தொடங்கியது. சுமார் ரூ. 900.25 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர்கள், பெரியவர்களுக்கான பூங்கா, உடற்பயிற்சி கூடம், கணிதம், அறிவியல் உபகரணங்கள், காய்கறி, பழங்கள், இசை நீரூற்று, காங்கிரீட் மரங்கள், விலங்குகள், பறவைகள் என நூற்றுக்கணக்கான அம்சங்களுடன் பூங்கா தயாராகி வருகிறது. வரும் மார்ச் மாதத்தில் பூங்கா திறப்பு விழா காண உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பணிகளை ஆய்வு செய்தார்.

 

Kalaignar's pen statue in puthukottai park

 

தற்போது அந்த அதிநவீன பூங்காவில் காங்கிரீட் பேனா சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பேனா சிலை கட்டுமானப் பணிகள் நடப்பது பற்றி அறிந்த ஏராளமானவர்கள் தினசரி வந்து பார்த்துச் செல்கின்றனர். இதே புதுக்கோட்டை நகரில் காந்தி பூங்கா உள்பட பல பூங்காக்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் தனியார் ஒப்பந்தக்காரர்கள் கையில் சிக்கி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இப்போது 9 கோடியில் அமைக்கப்படும் பூங்காவை யார் கைப்பற்றி மக்கள் பணத்தை பறிக்கப் போகிறார்களோ என்கின்றனர் விபரமறிந்த பலரும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள். 

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார்.