
தி.மு.க. தலைவர் கலைஞரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 3-வது நாளான இன்று தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பொது மக்கள் பலர் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து குடும்பத்தோடு அஞ்சலி செலுத்தியதை காண முடிந்தது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர். பொது மக்கள் அதிக அளவில் கூடுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருந்தார். அதன்படி அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மதிய உணவு வழங்கப்படும் என்று கலைஞர் புகைப்படத்துடன் கூடிய தட்டி வைக்கப்பட்டிருந்தது. நீண்ட தூரத்திலிருந்து வந்தவர்களுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருந்ததாக தெரிவித்தனர். திமுக மூத்த நிர்வாகிகள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டவர்கள் மதிய உணவு பொட்டலங்களை வழங்கினர்.