கலைஞர் மறைந்த அதிர்ச்சியிலிருக்கிறது தமிழகம். தொண்டர்களும் மாற்றுக்கட்சி தலைவர்களும் பிரமுகர்களும் கலைஞருக்கான தங்கள் அஞ்சலியையும் அவருடனான தங்கள் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். திராவிட விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக செயல்பாட்டாளராகவும் திகழும் முத்தகரம் பழனிச்சாமி, கலைஞர் குறித்து பகிர்ந்தது...
"இன்று சமூக ஊடகங்களில் கலைஞர் குறித்து பல கருத்துகள் பல வகைகளாக உலவுகின்றன. இந்த தலைமுறை கலைஞரை எப்படி புரிந்து வைத்திருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், கடந்த தலைமுறையில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும், குக்கிராமங்களில் இருந்து தங்கள் வாழ்க்கை முறையில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுவிடாதா என ஏங்கியவர்களுக்கும்தான் தெரியும் கலைஞர் யாரென்று. ஒளி இல்லாத போதுதான் அதன் அவசியம் தெரியும். அதுபோல சமூக நீதி என்ற ஒன்று இல்லாத அந்த காலகட்டத்தில்தான் திராவிட இயக்கத்தின், அண்ணா, கலைஞர் போன்ற அரசியல் தலைவர்களின் தேவையும் நன்றாகத் தெரிந்தது.
எனக்கு கலைஞரின் மூலம் தமிழ் அறிமுகம். தமிழ் மூலம் கலைஞர் அறிமுகம். இது எனக்கு மட்டுமல்ல, ஒரு தலைமுறைக்கே நடந்த விஷயம். அவரது பாதிப்பில்தான் என் பிள்ளைகளுக்கு அழகிய தமிழில் பெயர் வைத்தேன். இதுபோல லட்சக்கணக்கான குடும்பங்களில் கலைஞரின் பாதிப்பு உண்டு. இந்த பாதிப்பில்லாமல் போயிருந்தால், மராத்தி போல, போஜ்பூரி போல, இப்பொழுது ஹைதராபாதில் தெலுங்கு போல, தமிழும் ஹிந்தியில் மூழ்கியிருக்கும். அப்படி நடக்காமல் தடுத்ததில் கலைஞரின் பங்கு பெரியது.
ஆரம்பத்தில் அவரது திட்டங்கள், நடவடிக்கைகள் அனைத்துமே உற்று நோக்கினால் சுயமரியாதை சார்ந்ததாக இருக்கும். கைவண்டி ஒழிப்பிலிருந்து கண்ணகி சிலை, கண்காட்சி வரை தமிழரின் வரலாறை சுயமரியாதையை நிமிர்த்தியது. பின்னாளில் எளிய மக்களையும் சில இன்பங்களை, அறிவியல் முன்னேற்றத்தை அனுபவிக்க வைக்க இலவசங்களைத் தந்தார். ஆனால், அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதன் பலனை அனுபவித்தவர்களுக்கு தெரியும் அதன் அருமை. தமிழகத்தில் விவசாயிகள் கடன்சுமையில் தவித்தபொழுது, பல விவசாயிகள் கடன் தொல்லையால் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டபோது, கலைஞர் விவசாயக் கடனை தள்ளுபடி செய்து அவர்கள் துயரை துடைத்ததை யாரும் மறுக்க முடியாது. எப்படி பார்த்தாலும் எங்கோ தூரத்திலிருப்போருக்கும் ஓரத்திலிருப்போருக்கும் ஒளி கொடுத்த சூரியன் இன்று ஓய்வெடுத்திருக்கிறது"