சென்னை கதீட்ரல் சாலையில், செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால், ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’ அமைக்கப்பட்டது. இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி (07.10.2024) திறந்து வைத்தார். இந்த பூங்காவில் கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம், பசுமை குகை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பாரம்பரிய காய்கறித்தோட்டம், சிற்றுண்டியகம் போன்றவை சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.
அதே சமயம் இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 100, சிறியவர்களுக்கு ரூ. 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களைப் பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் எனத் தினந்தோறும் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் கனமழை அறிவிப்பு எதிரொலி காரணமாகப் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை (15.10.2024) முதல் வரும் 18ஆம் தேதி (18.10.2024) வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Orange and Red Alert) விடுக்கப்பட்டுள்ளதால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி சென்னை, கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவானது, 15.10.2024 (செவ்வாய்க்கிழமை) முதல் 18.10.2024 (வெள்ளிக்கிழமை) வரை செயல்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.