பொது சுகாதாரம் தூய்மைப்பணி அனைவருக்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் தூய்மைப்பணி செய்ய வந்த, பெண் தூய்மைப் பணியாளருக்கு நீதிபதிகள் பாத பூஜை செய்தனர். இந்த இந்த நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், உளுந்தூர்பேட்டை நகராட்சி தூய்மை பணியாளர்கள் சிறப்பு தூய்மை பணித்திட்ட முகாம் ஒன்றை நேற்று நடத்தினர். இந்த முகாம் நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் துவங்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப்பணி மேற்கொள்ள தூய்மைப் பணியாளர்கள் வருகை தந்தனர்.
இந்நிகழ்ச்சியை துவக்கி வைக்க வந்த மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதிகள் விக்னேஷ் பிரபு, நீதிபதி ஸ்ரீராம், ஆகியோர் தூய்மைப் பணி மேற்கொள்ள வந்த பெண் பணியாளர் உமாவதி என்பவரை அமர வைத்து, அவரது கால்களை கழுவி பொட்டு வைத்து, பூ வைத்து அவருக்கு பாத பூஜை செய்தனர். அப்போது, நீதிபதிகள் தூய்மைக்கு முக்கிய காரணமாக உள்ள உங்களைப் போன்ற பணியாளர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம் என்று கூறினர். தூய்மை பணியாளர் உமாவதி இருகரம் கூப்பி நீதிபதிகளுக்கு வணக்கம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகம் முழுவதும் இருந்த செடி, கொடிகள், புதர்கள் ஆகியவற்றை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. அப்போது தூய்மைப் பணியின் அவசியம் குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வெங்கடேசன் அரசு வழக்கறிஞர்கள் இளமுருகன், வெங்கடேசன், ஜான்சி ராணி, மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.