Skip to main content

"உங்களை அடித்ததற்கு சாரி..." - அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்ட நீதிபதி

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

judge apologized to the government bus driver

 

அரசுப் பேருந்து ஓட்டுநரை அடித்ததற்காக, நடுரோட்டில் நின்றுகொண்டு மன்னிப்பு கேட்ட நீதிபதியின் வீடியோ காட்சி வெளியாகி சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் சுங்கம் பகுதியிலிருந்து கடந்த 15 ஆம் தேதி மதியம் 12 மணியளவில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 5சி பேருந்து டவுன்ஹால் வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் 2வது நீதிபதி செந்தில் ராஜா தனது காரில் அதே வழியாகச் சென்று கொண்டிருந்தார். 

 

ad

 

அந்த சமயம் நீதிபதியின் காரை கடக்க முயன்ற அரசுப் பேருந்து ஓட்டுநர், அவரது காரை லேசாக உரசுவதுபோல் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த நீதிபதி செந்தில் ராஜா, அந்த அரசுப் பேருந்தை ஓவர் டேக் செய்து காரை சாலையில்  நிறுத்திவிட்டு பேருந்து ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

 

இதனிடையே, இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதை அடுத்து பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இதனால் அப்பகுதியில் அரசுப் பேருந்து ஊழியர்களும், பொதுமக்களும் கூட தொடங்கினர். அதைத் தொடர்ந்து, பந்தய சாலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அரசுப் பேருந்து ஊழியர்களையும், நீதிபதியையும் சமரசம் செய்ய முயன்றனர்.

 

ஆனால், நீதிபதி தரப்பினர் மன்னிப்பு கேட்டால்தான், இங்கிருந்து கலைந்து செல்வோம் என பேருந்து ஊழியர்கள் விடாப்பிடியாக இருந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் மன்னிப்பு கேட்ட பிறகு, பேருந்து ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், நீதிபதியிடம் போக்குவரத்து ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆடையை கழட்டுமா...” - நீதி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A case of judge for A woman who went to court seeking justice in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், கரெவுளி மாவட்டத்தில் உள்ள ஹிண்டாவுன் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இந்த நிலையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி சில மர்ம கும்பல், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தின் நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அப்போது, நீதிபதி காயங்களை காட்டுவதற்காக அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றும்படி கூறியதாக கூறப்படுகிறது. 

இதில் அதிர்ச்சியடைந்த பெண், இது தொடர்பாக நீதிபதி மீது போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரில், ‘என் வாக்குமூலத்தைப் பெற நீதிபதி என்னை அழைத்திருந்தார். அதன்படி, நான் நீதிமன்றத்திற்கு சென்று முழு அறிக்கையை கொடுத்தேன். அதன் பிறகு, நான் வெளியே வர ஆரம்பித்தேன். அப்போது, நீதிபதி என்னை மீண்டும் திரும்ப அழைத்தார். அப்போது, அவர் என் ஆடைகளை கழற்றச் சொன்னார். அதற்கு நான், ஏன் என் ஆடைகளை கழற்ற வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர், என் உடலில் உள்ள காயங்களை பார்க்க விரும்புவதாக கூறினார். உங்க முன்னாடி என்னால துணியை திறக்க முடியாது என்று கூறி, மறுப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியே சென்று விட்டேன்’ என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஹிண்டாவுன் நகர போலீசார் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நேற்று (03-04-24) வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை ஆடைகளை கழற்ற சொன்ன நீதிபதி மீது வழக்கு பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அங்கித் திவாரி வழக்கு; நீதிபதி கோபம்! 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Ankit Tiwari case; The judge is angry

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள். இதனையடுத்து அங்கித் திவாரி இரண்டாவது முறையாக தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். எனவே சட்டப்படி ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மனுதாரர் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டது.

அதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உச்சநீதிமன்றம் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை மட்டுமே விதித்துள்ளது. வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் மார்ச் 11 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வைத்துள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது” என கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட  நீதிபதி, மார்ச் 12 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (12.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறது. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கு நீர்த்துப்போகும்” என வாதிட்டார். மனுதார் அங்கித் திவாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்து ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி விவேக்குமார், “தாம் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. ஆனால் மனுதாரர் தரப்பு ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிடுகிறார். இதனால் அங்கித் திவாரியின் வழக்கில் இருந்து விலகுகிறேன். இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை” எனக் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.