நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதியை ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிற்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநிலக் குழு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் இரா.காமராசு வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், "இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மருத்துவக் கல்வி வழங்குவதில் தனித்துவமாகவும், முன்னோடியாகவும் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் 24 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 24 தனியார் மருத்துவக்கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. மேலும் கூடுதலாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 7,000 மாணவர்கள் மருத்துவக் கல்வியை தமிழ்நாட்டில் நிறைவு செய்து அவர்கள் மருத்துவர்களாகின்றனர். உலக அளவிலான மருத்துவச் சிகிச்சையில் நாட்டிலுள்ள பிற பெருநகரங்களுக்கு இணையாக சென்னை மாநகரம் மருத்துவச் சுற்றுலாவுக்காக தேர்வு செய்யப்படுவதும் நிதர்சனமான உண்மை.
சமூக நீதிக்கு வேட்டு:
இந்த நிலையில், மருத்துவக் கல்வி பயில 'நீட்' என்ற நுழைவுத் தேர்வை இந்திய ஒன்றிய அரசு திணித்திருக்கிறது. இந்தத் தேர்வு ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மருத்துவக் கல்விக் கனவைத் தகர்க்கிறது. 'எல்லோருக்கும் படிக்க வாய்ப்பளிக்க வேண்டும்' என்ற உயர்ந்த சமூக நீதிக் கொள்கையைக் கேள்விக்குள்ளாக்கிவிட்டிருக்கிறது. இது ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியிருக்கிறது. நீண்டகாலம் போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டு மாண்பைச் சிதைத்திருக்கிறது. 2015-16ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் இருந்து 456 மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலச் சென்றுள்ளனர். 2016-17ஆம் ஆண்டில் 438 பேர் மருத்துவக் கல்வி பயிலச் சென்றுள்ளனர். ஆனால், நீட் தேர்வுக்குப் பிறகு, 2017-18ஆம் ஆண்டில் வெறும் 40 பேரும், 2018-19ஆம் ஆண்டில் வெறும் 88 பேரும் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள், மருத்துவக் கல்வி பயிலச் சென்றுள்ளனர் என்ற புள்ளிவிவரம் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தேர்வு அச்சமும் தற்கொலைகளும்:
பள்ளிக் கல்வியில் உச்சபட்ச மதிப்பெண்களை எடுத்தவர்களுக்கும் இந்த நுழைவுத் தேர்வு அச்சத்தை ஏற்படுத்தி தற்கொலை எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2017ஆம் ஆண்டில் அரியலூர் அனிதா தொடங்கி, திருச்சி சுபஸ்ரீ , சென்னை ஏஞ்சலின், விழுப்புரம் பிரதீபா, திருப்பூர் ரிதுஸ்ரீ, விழுப்புரம் மோனிகா, தஞ்சாவூர் வைஷ்யா, கோவை சுப ஸ்ரீ , மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, அரியலூர் வி. விக்னேஷ் என உயிரிழப்புப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அச்சுறுத்தும் வணிகமயம்:
'நீட்' தேர்வுக்கான தனிப்பயிற்சி மையங்களை அரசு- அரசுப் பள்ளிக்கூடங்களில் தொடங்கப்பட்டாலும், அதே மாணவர்களும் கூட மழைக்காளான்கள் போல அடர்ந்து முளைத்துவிட்ட தனியார் தனிப்பயிற்சி மையங்களுக்கு சில லட்சங்களைக் கொடுத்துப் படிக்க வேண்டிய துயரத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 'நீட்' தேர்வை முற்றிலும் எதிர்க்கிறது. தமிழ்நாட்டு மக்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கவும், சமூக நீதிக் கொள்கையை உறுதிப்படுத்தவும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை மாண்புமிகு நீதியரசர் தலைமையிலான குழுவின் முன்பு சமர்ப்பிக்கக் கடமைப்பட்டிருக்கிறது.
1. தமிழ்நாட்டிலுள்ள எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான மொத்த இடங்களில் 85 சதவிகிதம் தமிழ்நாட்டுக்கு உரியது. இந்த இடங்களில் சேரும் தமிழ்நாட்டு மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும்.
2. தமிழ்நாட்டிலுள்ள பட்ட மேற்படிப்பு இடங்களான MD, MS, DNB, DIPLOMO, போன்ற படிப்புகளில் 50 சதவிகிதம் தமிழ்நாட்டுக்கு உரியது. இந்த இடங்களில் சேரும் தமிழ்நாட்டு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும்.
3. தமிழ்நாட்டிலுள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான DM, MCh போன்ற படிப்புகளில் தமிழ்நாட்டுக்கு எந்த ஒதுக்கீடும் இல்லை. தமிழ்நாட்டிலுள்ள இந்த உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளை நீட் தேர்வின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மருத்துவர்களும் படித்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மாநில உரிமைக்கு எதிரானது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. இந்த உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளை முழுமையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு ஒதுக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
4. எம்பிபிஎஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையின் போது அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு, நீதியரசர் கலையரசன் குழு அறிவுறுத்திய 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
5. எம்பிபிஎஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையின் போது அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
6. எம்பிபிஎஸ், பட்ட மேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களின் எண்ணிக்கையை தமிழ்நாட்டில் உயர்த்திட வேண்டும்.
7. மருத்துவக் கல்வியை தமிழ்நாட்டு மாணவர்கள் தமிழ் வழியிலேயே கற்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். எம்பிபிஎஸ் மற்றும் பட்ட மேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான நூல்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும். மருத்துவத் துறையில் வெளியாகும் ஆராய்ச்சி முடிவுகளை எல்லாம் உடனடியாக தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளைக் குழு பரிசீலித்து உரியப் பரிந்துரைகளை தமிழ்நாட்டு அரசுக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்." எனக் கூறியிருக்கிறார்.