மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஆரம்பகட்ட பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக பாஜக தலைவர் ஜெ.பி நட்டா கூறியதாக அமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்திருந்த பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மதுரையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "மதுரைக்கு வந்த ஜெ.பி. நட்டா, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூபாய் 1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்கு கூடுதலாக ரூபாய் 134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதற்கு தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன. இதனையடுத்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவுள்ள இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் விருதுநகர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்.
இந்த நிலையில், இன்று (24/09/2022) திருச்சியில் உள்ள சமயபுரம் கோயிலுக்கு சென்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார் .பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எல்.முருகன், "மதுரை எய்ம்ஸின் ஆரம்பக் கட்ட பணிகள் தான் 95% முடிந்ததாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கூறினார். ஜெ.பி.நட்டா கூரியத்தைப் புரிந்து கொள்ளாமல் தமிழக அரசியல்வாதிகள் விமர்சிக்கின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனை 2026- ஆம் ஆண்டுதான் முடிக்க வேண்டும். ஜைக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.