Skip to main content

“பத்திரிக்கையாளரை தாக்குபவர் மீது குண்டர் சட்டம்!” -விருதுநகர் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை!

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

jkl

 

நக்கீரன் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் மற்றும்  போட்டோகிராபர் அஜித்குமார் ஆகியோர் மீது கள்ளக்குறிச்சியில் நடந்த  கொலைவெறி தாக்குதலைக் கண்டித்தும், குண்டர்களை ஏவிய  கள்ளக்குறிச்சி  சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்,      விருதுநகர் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில்,  21-ஆம் தேதி  காலை 11 மணிக்கு,    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  சங்கத் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில், செயலாளர் மணிகண்டன்  முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.  இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்ட செய்தியாளர்கள் பலரும்  கலந்துகொண்டனர்.  

 

மேலும், பத்திரிக்கையாளர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ், தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில தொழிற்சங்க செயலாளர் விடியல் வீரபெருமாள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் நகர செயலாளர் செல்வம், நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை  ஆற்றினார்கள்.  சங்கப் பொருளாளர் செந்தலைக்குமார் நன்றி கூறினார்.  


 
கண்டன உரை நிகழ்த்திய அரசியல் கட்சி நிர்வாகிகள்  “தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களைத் தாக்குபவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும். பத்திரிக்கையாளர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படவேண்டும்.  மடியில் கனம் இருப்பதால்தான், கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர்,  பத்திரிக்கையாளர்கள் இருவரைத் தாக்கும் செயலில் இறங்கிவிட்டார்கள். கொடூரத் தாக்குதலின் பின்னணியில் உள்ள பள்ளி நிர்வாகிகள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம், கொலையா? தற்கொலையா? என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அதற்குள், சக்தி பள்ளி நிர்வாகிகள் ஜாமீனில் வெளிவந்து, ரவுடிகளைத் தூண்டிவிட்டு நக்கீரன் செய்தியாளர்களைத் தாக்கியிருக்கின்றனர். பட்டப் பகலில்  பொதுவெளியில் பத்திரிக்கையாளர்களைத் தாக்குவதற்கே அஞ்சாதவர்களாக அந்தப் பள்ளி நிர்வாகத்தினர் இருக்கின்றனர். இத்தகையோர் பிடியில் கல்வி வியாபாரம் தமிழகத்தில் நடக்கிறது. மாணவர்கள் வேறு  சிக்கியிருக்கின்றனர். அதனால், அந்தப் பள்ளியில் மாணவர்கள் மர்மமாக மரணம் அடைவது தொடர்கிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவுகட்ட வேண்டும். 


 
பத்திரிக்கையாளர்களைத் தாக்கும் சக்தி பள்ளி நிர்வாகத்தினரே.. எங்களையா அடிக்கின்றீர்கள் என வெகுண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களும் ஒன்றுசேர்ந்து உங்கள் பள்ளிக்கு திரண்டு வந்தால் உங்கள் நிலைமை என்னவாகும்? பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு விளங்காது. அரசியல் கட்சிகள் மக்களுக்கானது மட்டுமல்ல. பத்திரிக்கையாளர்களை மிரட்டினால், அவர்களுக்குத் தோள்கொடுத்து அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கும். பத்திரிக்கையாளர்களுக்கு எப்போதும் துணைநிற்கும். கள்ளக்குறிச்சி பகுதியில் காவல்துறையினர் அந்தப் பள்ளிக்கு ஆதரவாக  நடந்துகொள்வதைப் பார்க்கும்போது, அந்தப் பள்ளி நிர்வாகம் எந்த அளவுக்கு காவல்துறையினரை கவனித்துவருகிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. 

 

l

 

தமிழக அரசுக்கு என்ன அழுத்தமோ தெரியவில்லை. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஆரம்பத்திலிருந்தே சுணக்கம் காட்டிவருகிறது. அரசியல் பலமோ, பணபலமோ, ஏதோ ஒன்று அந்தப் பள்ளி நிர்வாகத்தினரின் பின்னால் இருக்கிறது. அந்த தைரியத்தில்தான் பத்திரிக்கையாளர்களைத் தாக்கியிருக்கின்றனர். இந்த நிலை நீடித்தால்,  பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்புக்காக, அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து பெரிய அளவில் போராட்டம் நடத்தும். இதை ஒரு எச்சரிக்கையாகவே விடுக்கிறோம்.” என ஆவேசமாகப் பேசினர்.  

 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன்பாக, திருச்சுழி தொகுதி - காரியாபட்டி பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில், சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் நக்கீரன் பத்திரிக்கையாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் அனைவர் மீதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

  
கள்ளக்குறிச்சியில் நக்கீரன் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பல ஊர்களிலும் எழுச்சியோடு கண்டன ஆர்ப்பாட்டங்கள்  நடந்துவருகின்றன.  

 

 


 

சார்ந்த செய்திகள்