சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஆச்சிமுத்து என்பவர் மகன் சங்கர் என்கிற சவுக்கு சங்கர். யூடியூபரான இவர் தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) தேனியில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட விவகாரத்தில் ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் திருச்சி போலீசார் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா வழங்கியுள்ளார். 6 மாதத்திற்கு திருச்சி கணினிசார் குற்றவியல் பிரிவில் மாதத்திற்கு இரண்டு முறை ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு அவருக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.