
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அதிமுக சார்பில் பல்வேறு கூட்டணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு தொகுதிகளில் நாங்கள் எளிதாக வெற்றி பெற்று விடுவோம். ஒரு அரசியல் கட்சியில் ஒருவர் சேர்வது என்பது அவரவர்கள் விருப்பம். அதிமுகவில் உள்ளவர்கள் பாஜகவிலும், பாஜகவில் உள்ளவர்கள் அதிமுகவிலும் சேர்வது அவரவர்களின் விருப்பம். பாஜகவில் இருந்த ஏராளமானோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு கொடுத்து விட்டது. அதனைத் தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டு விட்டது' என்றார்.