Skip to main content

ஜோடுகுளி வனப்பகுதியில் கிடந்த பெண்ணின் சடலம்; இளைஞர் போலீசில் சரண் 

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

Jodukuli forest;  Youth Police investigation

 

காதல் திருமணம் செய்து கொண்ட மாணவியை இளைஞரே எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சேலம் மாவட்டம் ஜோடுகுளி அருகே வனப்பகுதியில் மாணவி ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் போலீசாரால் கைப்பற்றப் பட்ட நிலையில், விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதும், திருமணம் செய்த இளைஞரே பெண்ணைக் கொலை செய்ததும் தெரிய வந்தது.

 

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்துள்ளது ஜோடுகுளி. அங்கு வனத்தை ஒட்டிய பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். அந்த பகுதியில் ஆடு மாடுகளை மேய்க்க சென்றவர்கள் உடல் ஒன்று கிடப்பது குறித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார் இளம் பெண்ணின் சடலத்தின் அருகே இருந்த அவருடைய ஆடைகள், காலணி, தாலிக்கொடி ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்து கிடந்த பெண் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த கோகிலவாணி என்பதும் அரியானூரில் உள்ள தனியார் கல்லூரியில் அவர் பாராமெடிக்கல் நான்காவது ஆண்டு படித்ததும் தெரியவந்தது.

 

இந்நிலையில்  தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றும் முரளி கிருஷ்ணா (24) சரணடைந்தார். கோகிலவாணியை தான் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோகிலவாணி காதல் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. முரளி கிருஷ்ணா தாயாரும், கோகிலவாணியின் சித்தியும் பெங்களூருவில் ஒரே இடத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது கோகிலவாணியை சந்திக்க நேர்ந்து இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் வீட்டில் காதலை ஏற்றுக் கொள்ளாததால் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். பெங்களூரில் இருக்கும் முரளிகிருஷ்ணா அவ்வப்போது சேலத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து மனைவியை சந்தித்து விட்டு செல்லும் நிலையில் வழக்கம் போல் வந்த முரளி கிருஷ்ணா கோகிலவாணியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது இனிமேல் தன்னை சந்திக்க வர வேண்டாம் என கோகிலவாணி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த முரளி கிருஷ்ணா கோகிலவாணியை தாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரிய வந்துள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முரளி கிருஷ்ணாவை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்