ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் டிசம்பர் 29- ஆம் தேதி பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 47 இடங்களை கைப்பற்றியது. மேலும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இந்த கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 இடங்களை கைப்பற்றிய நிலையில், அக்கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அம்மாநில ஆளுநரை சந்தித்த ஹேமந்த் சோரன் ஆட்சியமைக்க உரிமை கோரினார்
இதனையடுத்து டிசம்பர் 29- ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழா நடக்க இருக்கிறது . இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்த ஹேமந்த் சோரன், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நேற்று (27.12.2019) அழைப்பு விடுத்திருந்தார்.
ஹேமந்த் சோரன் விடுத்த அழைப்பை ஏற்று ராஞ்சியில் நடக்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.