Jewels and money were stolen in the subsequent robbery

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டைப் பகுதியில் வசித்து வருபவர் மதன். இவர் புதுப்பேட்டையில் உள்ள அரசு நூலகத்தில் நூலகராக பணியாற்றி வருகிறார் இதனிடையே கடந்த வாரம் மதன் பயிற்சிக்காக பொள்ளாச்சி சென்றுள்ள நிலையில், இவரது மனைவி மற்றும் குடும்பத்தார் வேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர் இந்நிலையில் இன்று காலை மதன் மனைவி மற்றும் குடும்பத்தார் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைத்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

மேலும் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் தடயங்களை சேகரித்து மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களைத்தேடி வருகின்றனர்.

அதே நாளில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பெத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி(55). இவர் ஆலங்காயம் அடுத்த காவலூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி தன் மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக குடும்பத்துடன் நாமக்கல் சென்று பின்னர் அங்கிருந்து, குடும்பத்துடன் கன்னியாகுமாரிக்கு சுற்றுலா சென்று நேற்று பிற்பகல் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பத்மாவதி, அறையின் உள்ளே சென்றுபார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 85 சவரன் தங்க நகைகள், 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்ததுள்ளது,

Advertisment

இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பத்மாவதி ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,புகாரின் பேரில் ஆலங்காயம் காவல்துறையினர் இக்கொள்ளைச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பணம் மற்றும் தங்கநகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களைத்தேடி வருகின்றனர். இக்கொள்ளைச் சம்பவம் நடைப்பெற்ற வீட்டில் வாணியம்பாடி துணை காவல்கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறார். எப்பொழுதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இக்கொள்ளைச் சம்பவம் அரங்கேறிய நிகழ்வு ஆலங்காயம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் இப்படி கடந்த இரண்டு மாதங்களாக அடிக்கடி திருடு போவது வழக்கமாக உள்ளது. இதில் காவல்துறை பெரியதாக புலன் விசாரணை நடத்தி குற்றவாளிகளைப் பிடிக்காமல் இருப்பது பொதுமக்களை அச்சம் கொள்ள செய்துள்ளது.