
திருப்பூரில் நகைக்கடை ஒன்றில் 375 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் வடமாநிலத்தவர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் கொள்ளையடித்து விட்டு ரயிலில் ஏறி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் யூனியன் மில் பகுதியில் இருக்கக்கூடிய தனியார் நகைக்கடை ஒன்றில் அண்மையில் திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை இரவு வழக்கம்போல நகைக் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று மறுநாள் வெள்ளிக்கிழமை காலை கடையை திறந்த பொழுது கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 3.3 கிலோ தங்க நகை, 27.9 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நகைக் கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் நான்கு கொள்ளையர்கள் மாஸ்க் அணிந்தபடி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அந்த நான்கு நபர்களும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் ஊர்ஜிதமானது. இந்நிலையில் மஹ்தாப் ஆலம், முகமது சுப்கான் பத்ருல், திலாகஸ் ஆகிய நான்கு கொள்ளையர்களை மகாராஷ்டிராவில் வைத்து ரயில்வே காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு பேருமே பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், நகைக் கடையில் இருந்து திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு 2.1 கோடி ரூபாய் மதிப்புள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தெரிவிக்கையில், மாஸ்க் அணிந்து சம்பந்தப்பட்ட நகைக்கடையில் திருடிவிட்டு நடந்தே சென்று திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏறி சென்றுள்ளனர். அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ளது. திருப்பூரில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறிய கொள்ளையர்கள் அங்கிருந்து கனெக்டிங் ரயில் மூலம் மகாராஷ்டிரா தப்பிச் சென்றுள்ளது தெரிய வந்தது. பின்னர் மகாராஷ்டிரா காவல்துறை உதவியுடன் நால்வரையும் பிடித்ததாக கூறியுள்ளனர்.