புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள வடகாடு காவல் சரகத்திற்கு உட்பட்ட எல்.என்.புரம் ஊராட்சி அணவயல் கிராமத்தில் தாணான்டி அம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. இந்த கோயிலில், இன்று மாலை வந்த ஒரு நபர் கோயில் பூசாரியிடம் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சொல்ல அர்ச்சனை பொருட்களை வாங்கிப் பார்த்த போது அதில் தேங்காய் இல்லையே என்று பூசாரி கூறியுள்ளார்.
‘உங்க வீட்ல தேங்காய் இருந்தால் எடுத்து வந்து அர்ச்சனை செய்ங்க அதுக்கு காசு தந்துடுறேன்’ என்று வந்த நபர் கூறியுள்ளார். கோயில் அருகிலேயே பூசாரி ராமசாமி வீடு இருப்பதால், தன் வீட்டிற்குச் சென்று தேங்காய் எடுத்துக் கொண்டு வந்தார். அப்போது, பக்தராக வந்த நபரை காணவில்லை. அர்ச்சனை செய்ய வந்த நபரை காணவில்லையே என்று தேடிவிட்டு உள்ளே சென்று பார்த்த போது கோயிலில் உள்ளே பக்தர் நிற்கும் இடத்தில் இருந்து, சுமார் 7 அடியில் உள்ள உற்சவர்களான தாணான்டியம்மன், பெரியநாயகியம்மன் அம்பாள், இரு அம்பாள் சிலைகளுக்கு மத்தியில் இருந்த ஐயனார் சிலையில் கிடந்த நாலரை பவுன் தங்க நகைகள் காணாமல் போய் இருந்தது தெரிய வந்தது. அம்பாள்கள் கழுத்தில் கிடந்த தங்கத் தாலி உள்ளிட்ட நகைகள் கிடந்துள்ளது.
ஐயனார் சிலையில் கிடந்த நகைகளை காணவில்லை என உடனே கிராமத்தினருக்கு தகவல் சொல்ல கிராமத்தினர் அங்கு கூடினர். இதனையடுத்து, சம்பவம் குறித்து வடகாடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், அங்கு வந்த போலீசா இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரனையில், நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர் நேற்றும் பூ, பழம், தேங்காய்களுடன் இதே போல வந்து அர்ச்சனை செய்யதுவிட்டு சென்றுள்ளார். நேற்று வந்து மாலை நேரத்தில் கோயிலில் பூசாரி தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள் என்பதை நோட்டம் பார்த்துவிட்டு இன்று திருடும் நோக்கத்தில் பூசாரியை திசைதிருப்ப தேங்காய் வாங்காமல் சென்று பூசாரியை வீட்டிற்கு அனுப்பிவிட்டு ஐயனார் கழுத்தில் கிடந்த தங்க நகைகளை திருடிக் கொண்டு பூசாரி வருவதற்குள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டது தெரிய வந்துள்ளது.
இது போல கிராம கோயில்களை குறிவைத்து சாமி கும்பிடுவது போல கோயிலுக்குச் சென்று திருடுவதை வழக்கமாக கொண்ட திருடர்கள் யார் என்பது குறித்து போலீசார் தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.