/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vigilance-in.jpg)
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குநராக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார் தமிழக உள்துறை செயலர் பிரபாகர் ஐ.ஏ.எஸ்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக இருந்த டி.ஜி.பி. விஜயகுமார் இன்று ஓய்வு பெறுவதையொட்டி, அந்த பதவியை உடனடியாக நிரப்பியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் தமிழக அமைச்சர்களுக்கு எதிரான பல வழக்குகள் இருக்கின்றன. ஆனால், அந்த வழக்குகள் வேகமெடுக்காமல் விஜயகுமார் பார்த்துக்கொண்டார் என அவர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.
அதற்கேற்ப, வழக்குகளும் கிடப்பிலேயே கிடந்தன. இந்த நிலையில், விஜயக்குமார் போல டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளில் ஒருவரை புதிய இயக்குநராக நியமிக்கலாமா? என உயரதிகாரிகளிடம் எடப்பாடி ஆலோசித்தபோது, அரசுக்கு சாதகமாகவும் நம்பிக்கைக்குரியவராகவும் எந்த ஒரு அதிகாரியும் தென்படவில்லை. இதனால், ஏ.டி.ஜி.பி. அந்தஸ்திலுள்ள அதிகாரிகளின் பட்டியலை ஆராய்ந்து ஜெயந்த் முரளியை தேர்வு செய்திருக்கிறார் எடப்பாடி. அதற்கேற்ப, டிஜிபி அந்தஸ்தில் இருந்த இயக்குநர் பதவியை, ஏ.டி.ஜி.பி. அந்தஸ்திற்கு தகுதி இறக்கமும் செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இந்த துறையில் இருந்த அனுபவம் ஜெயந்த் முரளிக்கு உண்டு என்கிறார்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர். ஜெயந்த் முரளி இதுவரை கவனித்து வந்த சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.பதவியில் அமலாக்கத்துறை ஏ.டி.ஜி.பி.ராஜேஷ்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சுகாதார துறையின் முன்னாள் செயலாளர் பீலாராஜேஸின் கணவர்தான் ஏ.டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)