ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் மர்ம மரண வழக்கில், அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகச் சொல்லப்படும் கார் ஓட்டுநரிடம் சேலம் மாவட்ட தனிப்படை காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திவருகின்றனர்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள சமுத்திரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் சில ஆண்டுகள் கார் ஓட்டுநராகப் பணியாற்றிவந்தார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவுக்கு மேல் ஜெ.,வுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்குள் மர்ம நபர்கள் கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநரான கனகராஜ்தான் மூளையாகச் செயல்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், 2017ஆம் ஆண்டு ஏப். 28ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், சேலம் மாவட்டம் ஆத்தூர் சந்தனகிரி அருகே சாலை விபத்தில் மர்மமான முறையில் கனகராஜ் உயிரிழந்தார். அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள், பெங்களூருவில் இருந்து பெரம்பலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் என்றும், ஒருவழிப்பாதையில் தவறான திசையில் தாறுமாறாக வண்டியை ஓட்டிவந்து விபத்தில் சிக்கி, இறந்துவிட்டதாகவும் அப்போது ஆத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கை முடித்துவிட்டனர்.
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் மறு விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
கடந்த அக். 21ஆம் தேதி, கனகராஜ் மர்ம மரண வழக்கை விசாரிக்க ஆத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, கனகராஜின் உடன்பிறந்த அண்ணன் தனபால், ஆத்தூர் வடக்குக் காட்டைச் சேர்ந்த உறவினர் ரமேஷ் ஆகிய இருவரையும் கொடநாடு வழக்கை விசாரித்துவரும் கோத்தகிரி காவல்துறையினர், கடந்த மாதம் கைது செய்தனர். அவர்கள் மீது தடயங்களை அழித்ததாக வழக்குப் பதிவுசெய்தனர். தனபாலை 11 நாள்களும், ரமேஷை 10 நாள்களும் காவலில் எடுத்து விசாரித்து முடித்ததை அடுத்து, குன்னூர் சிறையில் அடைத்தனர்.
இது ஒருபுறம் இருக்க, சம்பவத்தன்று கனகராஜ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகச் சொல்லப்படும் காரின் உரிமையாளர், அதன் ஓட்டுநர் குறித்தும் தனிப்படையினர் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த மல்லிகா என்பவர், தனது மாமியார், இரண்டு குழந்தைகளுடன் 2017, ஏப். 28ஆம் தேதியன்று இரவு, சொந்த ஊரான பெரம்பலூருக்கு தனது ஃபோர்டு ஃபிகோ காரில் சென்றுகொண்டிருந்தார். அந்தக் காரை, சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்த ரபீக் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த கார் உரிமையாளருக்கு, தம்மம்பட்டியைச் சேர்ந்த ரபீக் எப்படி தற்காலிக ஓட்டுநராக நியமிக்கப்பட்டார்? அதன் பின்னணி என்ன? என்பது குறித்து ரபீக்கிடம் சனிக்கிழமை (நவ. 14) விசாரணை நடத்தியிருக்கிறது தனிப்படை.
கடந்த அக். 22ஆம் தேதியன்று ரபீக்கிடம் சுமார் ஒருமணி நேரம் முதற்கட்ட விசாரணையை நடத்தியிருந்த தனிப்படையினர், நவ. 13ஆம் தேதியன்று (சனிக்கிழமை) காலையிலேயே அவரை சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேரில் அழைத்துச் சென்று மாலை வரை விசாரித்திருக்கிறார்கள்.
தம்மம்பட்டியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வெங்கடேஷ் என்பவர்தான், பெங்களூருவைச் சேர்ந்த மல்லிகா என்பவரின் காருக்குத் தன்னை ஆக்டிங் டிரைவராக பணியமர்த்தினார் என்று விசாரணையின்போது கூறியுள்ளார். அதற்கு முன்பு கார் உரிமையாளருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தம்மம்பட்டியில் இருந்து பெங்களூருவுக்கு எப்போது சென்றடைந்தார்? அங்கிருந்து காரில் எத்தனை மணிக்குப் புறப்பட்டார்? வழியில் எங்கெங்கு நிறுத்தினார்? என்பது உள்ளிட்ட அடிப்படை விவரங்களை எல்லாம் கேட்டுப் பெற்றுள்ளனர். இதையடுத்து, அவர் கூறிய விவரங்களும் நேரமும் சரியாக பொருந்திப் போகிறதா என்பது குறித்தும் சயின்டிஃபிக் முறையில் ஆய்வு செய்ய உள்ளனர்.
அதேநேரம், கனகராஜ் மர்ம மரணத்திற்குப் பிறகு, ரபீக் ஒரு காரை சொந்தமாக வாங்கி வாடகைக்கு ஓட்டிவருவது, தனிப்படை காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி தனிப்படை காவல்துறை தரப்பில் பேசியபோது, “இப்போதைக்கு ரபீக்கிடம் ஆரம்பக்கட்ட விசாரணைதான் நடந்துவருகிறது. சம்பவத்தன்றும், அதற்கு முன்பும், பின்பும் ரபீக், அவருடைய குடும்பத்தினரின் செல்ஃபோன் எண்ணுக்கு யார் யார் தொடர்புகொண்டுள்ளனர் என்ற விவரங்களையும் சேகரித்துவருகிறோம். மேலும், ரபீக் ஓட்டிவந்த காரின் உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்படும்” என்றனர்.