Jayalalithaa House Ownership: Appeal Against High Court Order; Edappadi Palanisamy Info!

போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Advertisment

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அதிமுகசார்பில் நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவருகிறது. அதன்படி, சேலத்தில் உள்ள மாநகர் மாவட்டக் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சரும், அதிமுகஇணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்திற்கு திங்கள்கிழமை (29.11.2021) நேரில் வந்தார். அவர் தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றார்.

Advertisment

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தற்போது பெய்துவரும் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்குத் தயாராக உள்ள நிலங்களுக்கு ஹெக்டேருக்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

மத்தியக்குழு ஆய்வுசெய்து சென்ற பிறகு, கடந்த மூன்று நாட்களாக மழை பெய்துவருகிறது. எனவே இரண்டாவது முறையாகவும் சேதங்களை மதிப்பீடு செய்து மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் இருப்பதால் சேதம் ஏற்பட்டு, அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் சேதமாகும் நெல் மூட்டைகளைப் பராமரிக்க வேண்டும்.

நகர்ப்புறங்களில் மழையால் பல பகுதிகளில் போதிய வடிகால் வசதியின்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய மழை நீரை உடனடியாக மின் மோட்டார் மூலம் அகற்ற வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட தேவையான உதவிகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும்.

சேலத்தில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு இடிந்த வீடுகளை அரசு கட்டிக்கொடுக்க வேண்டும். தற்காலிகமாக அவர்கள் தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக 15 லட்சம் ரூபாயும், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் நிவாரணம் வழங்க வேண்டும்.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அதிமுக தொண்டர்களின் கோயிலாகும். அதைப் பொதுமக்கள் அனைவரும் பார்த்துச் செல்லும் வகையில் அரசுடைமை ஆக்கினோம். தற்போது நீதிமன்றம் அரசுடைமை செய்த உத்தரவை ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கலந்து பேசிய பிறகு மேல்முறையீடு செய்வோம். டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்படும்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.