திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரைத் தீவிரமாக தேடி வந்தனர்.
இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும் இவரது மரணம் தொடர்பாக பகீர் தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது ஜெயக்குமார் சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை அடித்துத் துன்புறுத்தப்பட்டிருக்கலாம். அவரின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு, உடல் முழுவதும் கம்பியால் சுற்றப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. அவர் உயிரிழந்த பின்னர் 4 மணி நேரம் கழித்து அவரது உடல் எரிக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதோடு ஜெயக்குமாரின் வயிற்றில் கடப்பா கல், இரும்பு தகடுகள் கட்டப்பட்டு உடல் எரிக்கப்பட்டது என்ற பகீர் தகவலும் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் பலரிடமும் விசாரணையை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவைத் தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.