ஒரு காலத்தில் ஒரு திரைப்படம் 50 நாள், 100 நாள் ஓடினால் அதற்கு வெற்றிவிழா கொண்டாடுவார்கள். இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் ஒருவாரம் தியேட்டரில் ஓடினால் அதுவே சாதனையாகத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், அவர்களது ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள். டி.வி, இணையதளம், மொபைல் போன்றவற்றின் வளர்ச்சியால் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் பார்வையாளர்கள் வெகுவாக குறைந்துவிட்டனர். இதனால் எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் முதல் இரண்டு வாரம் ஹவுஸ்புல்லாக படம் ஓடினாலே வெற்றி படம் என முத்திரை குத்தும் நிலையே இன்றைய திரையுலகில் நிலவுகிறது.
கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படம் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டது. முதல் வாரம் மட்டும் சுமார் 350 கோடி ரூபாய் வசூலித்துள்ளது எனச் சொல்லப்படுகிறது. இதனை வைத்து ரஜினி ரசிகர்கள் பல்வேறு வகையில் ரஜினியை ட்விட்டரில் டிரெண்ட் செய்துவருகின்றனர். அதேபோல், சமீபத்தில் ஏற்பட்ட சூப்பர் ஸ்டார் குறித்தான பேச்சுக்களுக்கெல்லாம் ஜெயிலர் படம் மூலம் ரஜினி தான் என்றும் சூப்பர் ஸ்டார் என்பதையும் நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரிலுள்ள விஷ்ணு திரையரங்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படம் கடந்த ஒருவாரமாக அரங்கம் நிறைந்த காட்சிகளாக இருப்பதால் படத்தின் வெற்றியை கொண்டாட ரஜினி ரசிகர்கள் திரையரங்கத்துக்கு மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்தபடி வந்துள்ளனர். அங்கு திரைப்படம் வெற்றிக்கு அடையாளமாக கேக் வெட்டி கற்பூரம் ஏந்தி பூசணிக்காய் உடைத்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைந்த ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் திரண்டிருந்த ரசிகர்கள், ஜெயிலர் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரைப்படம் வெளியாகும் முன்பு இந்தப்படம் வெற்றியடைய வேண்டுமென கோவில்களில் சிறப்பு பூஜை, மண் சோறு சாப்பிடுதல் என விதவிதமான வேண்டுதல்களில் ஈடுபட்டனர் ரஜினி ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.