மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் இன்று பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது.
இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கிய தீர்மானங்களில் ஒன்றாக ஆயுள் சிறைவாசிகள் குறித்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளை கடந்து வாடும் ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இக்கோரிக்கையை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளின் முன்பு 'சிறை நிரப்பும் போராட்டம்' நடத்துவது என்றும், இதில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் பங்கேற்க செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எதிர்வரும் ஜூலை 9 அன்று நெல்லை - பாளையங்கோட்டை மத்திய சிறை முன்பு மாலை 4 மணிக்கு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து மதுரை மத்திய சிறை முன்பு 18.08.2023 அன்றும், சேலம் மத்திய சிறை முன்பு 07.09.2023 அன்றும், கடலூர் மத்திய சிறை முன்பு 07.10.2023 அன்றும் இப்போராட்டம் நடத்தப்படும் என்றும் சென்னை - புழல், கோவை, திருச்சி, வேலூர், ஆகிய சிறைச்சாலைகள் முன்பு அடுத்தடுத்து போராட்டம் நடைபெறும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போராட்டங்கள் மாபெரும் சட்டப் புரட்சியை ஏற்படுத்தும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் தலைமை நிர்வாகிகள், மாநில துணைச் செயலாளர்கள், மாநில அணி செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.