'தமிழ் மொழி கல்வி, மகளிர் கல்வி இதெல்லாம் வளர்வதுதான்; வளர்ப்பது தான் திராவிட மாடல்' என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையில், ''தமிழக முதல்வர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது, எனக்கு இரு கண்கள். ஒன்று கல்வித்துறை மற்றொன்று சுகாதாரத்துறை. இந்த கல்வித்துறையும் சுகாதாரத்துறையும் வளர வேண்டும். ஆரம்பக்கல்வியாக இருந்தாலும், உயர் கல்வியாக இருந்தாலும் இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாடு தான். உயர்கல்வியில் 53 சதவீதம் நம் தமிழ்நாட்டில் இருக்கிறது. மற்றவை எல்லாம் மீதி தான். அந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிற ஒரு மாநிலம் தமிழகம். இந்த தமிழ்நாடு மிகச் சிறப்பாக கல்வி வளர்ச்சியை பெற்று இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆசிரியப் பெருமக்களிடம் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் இருக்கிறீர்களே நீங்கள்தான் உண்மையாக இளைஞர்களை, மாணவர்களை உருவாக்குகின்றீர்கள். அதற்கான ஆற்றல் உங்கள் கைகளில் தான் இருக்கின்றது. பிஞ்சில் படிக்க வைத்து அவர்களை வளர்த்தெடுக்கும் கடமை பொறுப்பு உங்களிடம் தான் இருக்கிறது. நீங்கள் எந்த அளவிற்கு சொல்லித் தந்து அவர்களை வளர்க்கிறீர்களோ அதுதான் மேற்படிப்புக்கும், மற்ற படிப்புக்கும் அவர்களை உயரச் செய்யும். ஆகவே அடிப்படை என்பது உங்களிடம் தான்.
தமிழக முதல்வர் அதைத்தான் சொல்வார். நம்முடைய காலத்தில் உயர் கல்வித்துறை பொற்காலமாக திகழ வேண்டும் என்று. உயர்கல்வித்துறை பொற்காலமாக திகழ வேண்டும் என்று சொன்னால் செய்ய வேண்டியது உங்களுடைய பொறுப்பு, உங்களுடைய கடமை. அந்த அடிப்படையில் தான் நான் இதை பொறுமையோடு உங்களிடம் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். பெருமையோடும் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். தமிழகத்தினுடைய ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், அதுவும் தமிழ் ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். நாங்கள் எல்லாம் தமிழ் படிக்கும் பொழுது எல்லோரும் தமிழ் படிக்க வேண்டும் என்று கொண்டு வந்தவர் கலைஞர். அதுதான் திராவிட மாடல் ஆட்சி. திராவிட மாடல் என்று தமிழக முதல்வர் சொல்வது தமிழ் மொழி கல்வி, மகளிர் கல்வி இதெல்லாம் வளர்வதுதான் வளர்ப்பது தான் திராவிட மாடல்'' என்றார்.