'It's a village song...'- District administration explains about the viral video

அரசு புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த பள்ளி மாணவிகள் அங்கு ஒலித்த பாடலுக்கு சாமியாடிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழக அரசு சார்பில் புத்தகக் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் 'காக்கை பாடினியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி' மாணவ மாணவிகள் அழைத்துவரப்பட்டனர். புத்தகக் கண்காட்சி தொடக்க விழா என்பதால் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மேடைகளில் நிகழ்த்தப்பட்டது.

அப்பொழுது 'அங்கே இடி முழங்குது' என்ற கருப்பசாமி பாடல் ஒலிக்கப்பட்டது. கருப்பசாமி வேடமிட்ட ஒருவர் ஆடி வந்தார். இந்த பாடல் ஒலிக்க ஒலிக்க அங்கிருந்த மாணவிகள் சிலர் சாமியாடத் தொடங்கினர். சுற்றி இருந்த மற்ற மாணவிகளும் ஆசிரியர்களும் சாமியாடிய மாணவிகளை கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியாமல் தவித்தனர். மாணவிகள் சாமியாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் சில மாணவிகள் அயர்ச்சியில் கீழே விழுந்தனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள், ஆசிரியர்கள் மாணவிகள் முகத்தில் தண்ணீர் தெளித்து இருக்கையில் அமர வைத்து ஆசுவாசப்படுத்தினர்.

Advertisment

அரசு நிகழ்ச்சியில் பக்தி பாடலை பாடியது ஏன்? என சிலர் கேள்வி எழுப்ப, விழா ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அழைத்துவரப்பட்ட குழுவினர் பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிளம்பினர். அண்மையில் அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் மதுரையில் நடந்த இந்த ஒரு சம்பவமும் சிறிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தற்போது மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கலை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாகவே கருப்புசாமி வேடமணிந்து கிராமிய இசை பாடல் ஒலிபரப்பப்பட்டது. இது பக்தி பாடல் அல்ல கிராமிய பாடல். இதில் வேறு எந்த நோக்கமும் இல்லைஎன மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.