Skip to main content

'இது மக்களை பின்னோக்கி இழுத்துச் செல்லும் செயல்' - கிருஷ்ணசாமி எதிர்ப்பு

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

'It's a process that drags people backwards' - Krishnaswamy oppose

 

பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்களை அம்மாநில அரசு நேற்று (02.10.2023) வெளியிட்டது. நேற்று வெளியிட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 பேர் ஆவர். இவர்களில் 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் பொதுப் பிரிவினர் (GEN) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 15.52% ஆகும். 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (BC) சேர்ந்தவர்கள். இது மொத்த மக்கள் தொகையில் 27.12% ஆகும்.

 

மேலும் 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (EBC) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 36.01% ஆகும். 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் (SC) பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 19.65% ஆகும். 21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் (ST) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 1.68% ஆகும். இப்படியாக பீகார் மாநில அரசு நாட்டிலேயே முதன் முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

 

'It's a process that drags people backwards' - Krishnaswamy oppose

 

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும், சிலர் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தல்களை வைத்து வருகின்றனர். தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் என்ற வலியுறுத்தலை வைத்துள்ளார். இந்தநிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மக்களை பின்னோக்கி இழுத்துச் செல்லும் செயல். அது ஒரு தவறான நடைமுறை' என கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

'வி.பி.சிங்கின் துணிச்சலை முதல்வரும் வெளிப்படுத்த வேண்டும்'-ராமதாஸ் வலியுறுத்தல்   

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

'The Chief Minister should also show the bravery of VP Singh'- Ramadoss emphasized

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பதினைந்தாம் ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படவுள்ள நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே அவருக்கு செலுத்தும் மரியாதை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவின்  முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பதினைந்தாம் ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது திருவுருவச் சிலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. இது சமூகநீதிக் காவலருக்கு செய்யப்படும் மிகப்பெரிய மரியாதை ஆகும். இது வரவேற்கத்தக்கது.

 

அதேநேரத்தில், வி.பி.சிங் அவர்களின் கனவான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது  தான் அவருக்கு தமிழக அரசு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும். வி.பி.சிங் அவர்கள்  பிரதமர் பதவியில் இருந்த போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பெரிய அளவில் எழுப்பப்படவில்லை. எனினும், அவரது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தேவை எழுந்த போது, அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2006 & ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில்  நான் வலியுறுத்தியதன் பயனாக, அதே ஆண்டில் அதற்கான சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி 27% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. அக்கோரிக்கையை வி.பி.சிங் ஆதரித்தார்.

 

2007  ஆம் ஆண்டில் கடுமையான உடல்நலக் குறைவால் வி.பி.சிங் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரகக் குறைபாட்டுக்காக ஒருநாள் விட்டு ஒருநாள் குருதி சுத்திகரிப்பு செய்ய வேண்டியிருந்தது. அத்தகைய சூழலிலும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை மேற்கொண்ட வி.பி.சிங், பிரண்ட் லைன் ஆங்கில இதழுக்கு  அளித்த நேர்காணலில்,‘‘ மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் நான் 27% இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது சாதிவாரி கணக்கெடுப்புக் குறித்து உச்சநீதிமன்றம் வினா எழுப்பவில்லை. ஆனால், இப்போது வினா எழுப்பும் நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம். அதை ஓராண்டுக்குள் செய்யவேண்டும்’’ என்று வலியுறுத்தினார். அதை தேசிய அளவில் செயல்படுத்த வாய்ப்பற்ற நிலையில், மாநில அளவில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி முதல்வர் செய்ய வேண்டும்.

 

இந்தியாவின் சமூகநீதிக் காவலர் என்று வி.பி.சிங் போற்றப்படுவதற்கு காரணம் மிகக் கடுமையான அரசியல் எதிர்ப்புகளையும் மீறி மண்டல் ஆணையப் பரிந்துரைகளை செயல்படுத்தியது தான். அதனால்,  அவர் ஆட்சியை இழந்தார்; அதன்பின் வந்த தேர்தல்களில் உயர்சாதி வாக்குவங்கியை இழந்தார்; பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயமும் அவரை முழுமையாக ஆதரிக்கவில்லை. அதனால், அவரது அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வந்தது. ஆனாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

 

‘‘மண்டல் ஆணைய அறிக்கையை செயல்படுத்துவதற்கு முன்பாக நான் செய்த அனைத்து செயல்களும் சிறப்பானவை என்று பாராட்டப்பட்டன. மண்டல் அறிக்கையை செயல்படுத்திய பிறகு நான் செய்த ஒவ்வொன்றும் நாட்டிற்கு இழைக்கப்பட்ட தீமையாக பார்க்கப்பட்டன. இந்த ஆட்டத்தில் எனது கால் உடைந்தாலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற கோலை (நிளிகிலி) அடித்து விட்டேன். அந்த விஷயத்தில் மகிழ்ச்சி. எந்த ஒரு பொருளுக்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையை நீங்கள்  செலுத்தி தான் ஆக வேண்டும். ஒரு செயலை செய்துவிட்டு, அதற்கு இப்படி ஒரு விலை கொடுக்க வேண்டியதாகிவிட்டதே என வருத்தப்படக் கூடாது. நான் கொடுத்த விலை மண்டல் ஆணையத்தின் அறிக்கையை செயல்படுத்தியதற்கானது ஆகும்’’ என்று கூறி தமது அரசியல் துணிச்சலை வி.பி.சிங் வெளிப்படுத்தினார்.

 

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு இருந்த அரசியல் துணிச்சல் இப்போது தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு ஆகும். 27 விழுக்காடு  இட ஒதுக்கீட்டை வி.பி.சிங் செயல்படுத்திய போது அவருக்கு அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால், இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எந்த எதிர்ப்பும் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் கட்சிகள் தமிழக அரசியலில் துடைத்து எறியப்படும் என்பதால் எவரும் எதிர்க்க மாட்டார்கள்.  ஓபிசி மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு கொடுத்து சமூக நீதி வழங்குவதற்கு வி.பி.சிங்கிற்கு எதிராக இருந்த சூழல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி சமுகநீதி வழங்குவதில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவும், அது குறித்து பேசவும் மு.க.ஸ்டாலின் அஞ்சுவது ஏன்? எனத் தெரியவில்லை.

 

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டாலும் அதை தாங்கிக் கொண்டு சமூக நீதியை செயல்படுத்துவது தான் சமூகநீதி அரசியல் தலைவர்களுக்கு அழகு. ஆனால், எந்த இழப்பும், எந்த எதிர்ப்பும் இல்லாமல், நற்பெயரைப் பெற்றுக் கொடுத்து, வரலாற்றில் இடமளிக்கக் கூடிய சாதிவாரி  மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசின் சார்பில் நடத்த அஞ்சுவது அழகல்ல. எனவே, அனைத்து அச்சம் மற்றும் தயக்கங்களை தகர்த்தெறிந்து தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு  நடத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை வி.பி.சிங் அவர்களின் சிலைத் திறப்பு விழாவில் வெளியிடுவதன் மூலம் வி.பி.சிங் அவர்களுக்கு உண்மையான மரியாதையை மு.க.ஸ்டாலின் அவர்கள் செலுத்த வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” - விசிக சார்பில் குஷ்பு மீது புகார்

 

vck complaint against Khushbu

 

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

 

அந்த வகையில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். பின்பு தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு பரிந்துரை செய்தது. அதன்படி மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். அதன்படி நேரில் ஆஜராகி விளக்கமளித்தார் மன்சூர் அலி கான். இது ஒரு புறம் இருக்க இந்த விவகாரம் தொடர்பாக குஷ்பு பதிவிட்ட பதிவு பெரும் சர்ச்சையாகியுள்ளது. 

 

எக்ஸ் தளத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒருவர் குஷ்புவை டேக் செய்து, அப்போது ஏன் மகளிர் ஆணையம் வரவில்லை எனக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பு, “உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது” எனக் குறிப்பிட்டு விளக்கமளித்திருந்தார். சேரி மொழி என அவர் பயன்படுத்தியது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. இதற்கு பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ள குஷ்பு, “பிரஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இருப்பினும் குஷ்பு மீது தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தமிழக காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எஸ்.சி/எஸ்.டி பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் விசிக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், குஷ்பு மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் துறைமுகம் தொகுதி அமைப்பாளர் கார்த்திக் கொடுத்துள்ள புகாரில், “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு எக்ஸ் தளத்தில் ‘சேரி மொழியில் பேச முடியாது’ எனப் பதிவிட்டது என்னையும் நான் சார்ந்திருக்கின்ற மக்களையும் 2000 ஆண்டுக் காலமாக எமது மக்கள் குடியிருந்து வரும் பகுதியில் பேசுகின்ற மொழியையும் அவமானப்படுத்தியுள்ளது.

 

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் மன வேதனைக்கும் நான் உள்ளாகியிருக்கிறேன். மேலும் சேரியில் பேசுகின்ற மொழி வன்மம் கொண்ட மொழி என்றும் தீண்டத்தகாத மொழி என்றும் பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட குஷ்பு மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.