நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து(57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை, சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்துள்ளனர். சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பிரபலங்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர் மாரி செல்வராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், '' இயக்குநர், நடிகர், இலக்கிய வாசிப்பாளர், இயல்பான மனிதர் மாரிமுத்து சார். அவருடைய மரணம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒரு மிகப்பெரிய துயரம். பரியேறும் பெருமாள் ஜோவுடைய அப்பாவாக நடித்திருந்தார். நிச்சயமாக அந்த படத்தினுடைய வெற்றிக்கு அதுவும் முக்கியமான காரணம். ஏனென்றால் முதல் படம் எடுக்கும்போது இயக்குநருக்கு பெரிய நடிகர்களுடைய ஒத்துழைப்பு முக்கியம் என்பது தெரியும். அவ்வளவு பிரச்சனைகள் முதல் பட இயக்குநருக்கு இருக்கும். அந்த மாதிரி படம் எடுக்கும் பொழுது நடிகர்கள் அதை உள்வாங்கிக் கொண்டு நடிப்பது கஷ்டம். நிச்சயமாக அவர் இயக்குநராக இரண்டு படம் எடுத்து முடித்த பிறகு பரியேறும் பெருமாளுக்கு வந்தார்.
ஒரு இயக்குநரோட பிரஷர புரிந்து கொண்டு படத்தில் உள்ள என்னுடைய அரசியலையும் புரிந்து கொண்டு அந்த படத்தில் மிகப்பெரிய பங்களிப்பு கொடுத்தார். அன்னையிலிருந்து இன்று வரை நாங்கள் இருவரும் நண்பர்களாக இருக்கிறோம். பரியேறும் பெருமாளில் மறக்க முடியாத விஷயம் என்னவென்றால் அவருடைய கிளைமாக்ஸ் சீன் எடுக்கும் பொழுது வசனமாக இல்லாமல் படத்தினுடைய மொத்த எமோஷனலயும் அவருக்கு சொல்லிக் கொடுத்திருந்தேன். நீங்கள் சொன்ன அத்தனை விஷயத்தையும் விஷுவலா காட்டுவதைவிட, டயலாக்கா வச்சிடுங்க என்று சொன்னார். இல்ல சார் வேண்டாம் என்று சொன்னேன். அதற்கு அவர் இவ்வளவு விஷயங்களும் ஆடியன்ஸ்க்கு மிஸ் ஆகாம போய் சேர வேண்டும் என்றார். அவர் சொன்னபடி அதை நான் டயலாக் வைத்தேன். அதன் பிறகு தான் தெரிந்தது அது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று. நாம் வயதில் சிறியவனாக இருந்தால் கூட நான் சொல்லும் விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு செயல்படுவார். இப்படி ஒன்று நடக்கும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை''என்றார்.