![it is possible only through IP initiative" - MP Veluchamy - Interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZRbKkd2taC0gNdVJBHfdSRCK0Y7mraMrvVezzpe_HcA/1637948592/sites/default/files/inline-images/z13334.jpg)
திண்டுக்கல மாவட்டம் நிலக்கோட்டையில் தண்ணீர் வரும் வாய்க்கால்களைத் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். இதில் ஆவாரம்பட்டி கண்மாய் அருகே நீர்வரத்து வாய்க்காலைப் பார்வையிட வேலுச்சாமி சென்றபோது அங்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் ஓடி வருவதைப் பார்த்த மகிழ்ச்சியில் கிராம இளசுகள் தண்ணீரில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கால்வாயில் வரும் மீன்களைப் பிடிப்பதற்காக சில பெண்கள் வலைவிரித்து தண்ணீருக்குள் அமர்ந்தவாறு காத்திருந்தனர். கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை மகிழ்ச்சியைப் பார்த்து உற்சாகமான எம்.பி மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் ''மீன் கிடைத்ததா?'' எனக் கேட்டார். அவர்களும் கொஞ்சமாகப் பிடித்து வைத்து இருக்கிறோம் என்றனர். எனக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும் என் வீட்டுக்கு இதை எடுத்துச் செல்லவா எனக் கேட்டுவிட்டு, இன்னும் பொறுமையா நிறைய மீன் பிடியுங்கள் எனக் கூறினார்.
![it is possible only through IP initiative" - MP Veluchamy - Interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/80VClOZ3PC7R5O1QqNzzp0G5ljQ8fCEBEjlgcVIsPZc/1637948695/sites/default/files/inline-images/z1322.jpg)
அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய வேலுச்சாமி, ''பத்து வருஷமா இருந்த அதிமுக எம்எல்ஏ இந்தப் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரணும்'னு கொஞ்சம் கூட நினைக்கல. வாக்குறுதி கொடுத்து விட்டோம் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்று சொல்லி அமைச்சர் ஐ.பி அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு கண்மாய்க்கும் முறைப்படுத்தி ஆவாரம்பட்டி தண்ணீர் கொண்டு வந்துருக்காங்க. இந்தப் பக்கம் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்க. இதுதான் ஸ்டாலின் அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி'' என்று கூறினார்.
ராமராஜபுரம் மட்டப் பாறை பகுதியில் நடந்த பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் மனு கொடுத்த 120 பேரில் 90 பேருக்கு உடனடி தீர்வு காணும் விதமாக பட்டாக்களைக் கொடுத்துவிட்டுச் சென்றார். உடன் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் இருந்தனர்.