Skip to main content

“பெயர் மாற்றத்திற்கு பின்னால் இருப்பது தேசப்பற்றல்ல; தேர்தல் பயம்” - சு. வெங்கடேசன் எம்.பி.

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

It is not patriotism but electoral fear that is behind the name change Su Venkatesan MP

 

வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நம் நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

அதேபோல் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இந்தியா என வைத்திருந்த டிவிட்டர் முகப்பு படத்தை பாரத் என மாற்றியுள்ளார். பாரதம் என அழைப்பதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜக எம்பி ஹர்னாத் சிங் என்பவர், ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட இந்தியா என்ற பெயரை அழைப்பதில் அவமானமாக உள்ளது. எனவே பாரத் என மாற்றியதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழக ஆளுநர் இன்று ஆசிரியர் தினத்திற்காக வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்தியா என்ற சொல்லைத் தவிர்த்து பாரதம் எனக் குறிப்பிட்டுள்ளார். 'வலிமையான திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய ஆசிரியர்களுக்கு நன்றி' எனத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தங்களுடைய கூட்டணிக்கு 'இந்தியா' எனப் பெயர் வைத்திருக்கும் நிலையில், இந்தியாவின் பெயரைப் பாரதம் என மாற்ற பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “ஆன்டி இந்தியன் என்று அடுத்தவர்களை சொல்லியே பழக்கப்பட்டவர்கள் இப்பொழுது தாங்களே ஆன்டி இந்தியன் ஆகிப்போனார்கள்” என்றும் “தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற முயற்சித்தவர்கள் இப்பொழுது இந்தியா என்ற பெயரை மாற்ற முயற்சிக்கின்றனர். இந்தியாவைக் கண்டு பிரிட்டீஷாருக்கு பிறகு அதிகம் பயப்படுகிறவர்களாக பாஜகவினர் மாறியுள்ளனர். பெயர் மாற்றத்திற்குப் பின்னால் இருப்பது தேசப்பற்றல்ல, தேர்தல் பயம். இந்தியா வெல்லும்” என்றும் பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்