Skip to main content

“பக்கத்துக்கு தெருவுக்குப் போகிறவரை எல்லாம் நிறுத்தி அபராதம் விதிப்பது நியாயம் இல்லை” - ஜி.கே.வாசன் பேட்டி

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

gk vasan

 

“ஒரு தெருவில் இருந்து அடுத்த தெருவுக்குப் போகிறவரை எல்லாம் காவல்துறை தடுத்து நிறுத்துவது, அதற்கு அபராதம் வாங்குவதெல்லாம் நியாயம் இல்லை” என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் மாநில தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், ''அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக ஏழை எளிய, நடுத்தர மக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கு பாதுகாப்புத் தேவை அதை உறுதிப்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு இருக்கிறது. அது இருசக்கர வாகனங்களுக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்துகிறது. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு அந்தந்தப் பகுதிகளில் செய்யக்கூடிய பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ஒரு காலக்கெடுவுக்குள் பணிகளை எல்லாம் முடிவடையக்கூடிய சூழ்நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

தமிழக அரசு சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என்று மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கத் தவறி, கரோனாவுக்குப் பிறகு படிப்படியாக உயரக்கூடிய மக்களுக்கு பெரிய அளவிலே சுமையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனுடைய தாக்கம் மின் கட்டணமும், அதேபோல் வீட்டு வரி, தண்ணீர் வரி எல்லாம் கட்டும் பொழுது மக்கள் படும் அவதி மிகப்பெரிய அவதியாக இருக்கிறது.

 

கரோனா தாக்கத்தை விட தமிழக அரசின் இதுபோன்ற அறிவிப்புகளால் ஏற்பட்டிருக்கின்ற தாக்கம் அதிக அளவில் இருக்கிறது என்பதுதான் உண்மை நிலை. பொதுவாக வாகனங்களை கவனமாக ஓட்ட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. குறிப்பாக இருசக்கர வாகனங்களை மிக ஜாக்கிரதையாக ஓட்டக்கூடிய நிலையை ஓட்டுபவர்கள் ஏற்படுத்த வேண்டும். ஹெல்மெட் என்பது மிகவும் அவசியமான ஒன்று அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒரு தெருவில் இருந்து அடுத்த தெருவுக்குப் போகிறவரை எல்லாம் காவல்துறை தடுத்து நிறுத்துவது, அதற்கு அபராதம் வாங்குவதெல்லாம் நியாயம் இல்லை. ஒரு கால அவகாசம் கொடுக்க வேண்டும். காவல்துறையினர் இதை வைத்துக்கொண்டு எல்லோரையும் சங்கடப்படுத்தக்கூடிய சூழல் ஏற்படக்கூடாது என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்