தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
அந்த தீர்மானத்தில், ‘டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 700 பேர் தேர்வானது தொடர்பான செய்திகள் வெளியாகி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி முகாமில் இருக்கும் 700க்கும் மேற்பட்டோர் நில அளவர் ட்ராஃப்ட்மேன் பணியிடங்களுக்கு தேர்வு பெற்று இருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். தென்காசியில் ஒரு பயிற்சி மையத்தைச் சேர்ந்த 2000 பேர் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இது குறித்து உடனடியாக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்எல்ஏ வேல்முருகன் ஆகியோரும் இதுகுறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாகப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ''இது தொடர்பாக ஆராய்ந்து டிஎன்பிஎஸ்சி விரிவான விளக்கத்தை விளக்கிக் கூறி இருக்கிறேன். டிஎன்பிஎஸ்சி பல வகையில் சீர்திருத்தக்கூடியது என்பதை நானே இங்கு கூறியிருக்கிறேன். மூன்று ஆண்டுகளாக தேர்வே நடக்கவில்லை. அதற்கு முன் நடந்த ஆயிரம் பொறுப்புகளுக்கான தேர்வுகள் எல்லாம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு அப்படியே நிலுவையில் இருக்கிறது. மனிதவளம்தான் என்னை பொறுத்தவரை நிதியை விட அரசுக்கு முக்கியமானது என்பதற்காகவே தான் போன நிதிநிலை அறிக்கையில் அறிவித்தேன். சீர்திருத்தக் குழு உருவாக்கப்பட்டு தேர்வு மையங்கள், பயிற்சிகள் என எல்லா வகையிலும் மனிதவள மேலாண்மையைச் சிறப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிட்டேன். அதை இவர்கள் எதிர்த்தார்கள்.
திடீரென எனக்கு ஒரு கோப்பு வருகிறது, டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துவதற்கு 45 கோடி ரூபாய் கூடுதலாக வேண்டும் என்று. என்னவென்று போய் பார்த்தால் 7,000 இடங்களுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பம் போட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சுமார் 100 கோடி தாளை பின் செய்ய வேண்டும். 2,400 மையங்களில் தேர்வை நடத்த வேண்டும். இதற்கு 6 ஆயிரம் 7 ஆயிரம் இன்விஜிலெட்டர்ஸ் வேண்டும். இவர்களுக்கெல்லாம் 400 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் கொடுக்க வேண்டும் எனப் படிப்படியாக ஆய்வு செய்தேன்.
இந்த விதிமுறைகள் எல்லாம் இன்றைய காலத்திற்கு ஏற்புடையதல்ல. இது என்னுடைய நிர்வாக கருத்து. வருடத்திற்கு ஒரு தடவை 24 லட்சம் பேருக்கு தேர்வு நடத்துவது எல்லாம் நியாயமே இல்லை. 24 லட்சம் பேர் தேர்வு அதில் எழுதி ஏழாயிரம் பேரை தேர்ந்தெடுப்பதற்கு பல காடுகளில் மரங்களை வெட்டி நூறு கோடி பக்கத்தை டைப் அடித்து, தேர்வு கண்காணிப்பாளர்களை போட்டு, 42 கோடி செலவாகி ஒரே நாளில் தேர்வு நடப்பதெல்லாம் இன்று இருக்கக்கூடிய டெக்னாலஜி காலத்தில் சரியான விதிமுறையை இல்லை என்பதற்காகத்தான் நானே முதல் ஆளாக ஆரம்பித்து இந்த அமைப்பைச் சீர்திருத்த வேண்டும் என முதல்வரின் அறிவுரைப்படி பல நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம்'' என்றார்.