நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.
மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.