Skip to main content

18 மாதத்தில் கசந்துபோன காதல்; மருத்துவ மாணவியை கொன்று எரித்த ஐ.டி. ஊழியர்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

IT employee who incident medical student

 

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து கரம் பிடித்த மருத்துவக் கல்லூரி மாணவியை பதினெட்டே மாதங்களில் கொடூரமாக கொன்று, பெட்ரோல் ஊற்றி எரித்த ஐ.டி., ஊழியரிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.    

 

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள ஜோடுகுளியில் புலிசாத்து முனியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் பின்பக்கத்தில்  வனப்பகுதி உள்ளது. செப். 23ம் தேதி மாலையில், அந்தப் பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வந்த சிலர், கோயில் அருகே  இளம்பெண்ணின் சடலம் கிடந்ததையும், முகம் மட்டும் எரிக்கப்பட்டு இருப்பதையும் பார்த்துள்ளனர். அவர்கள் தீவட்டிப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையில், தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகர் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.     

 

தடயவியல் நிபுணர்களும் சடலம் கிடந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள், சடலத்தின் அருகில் சிதறிக் கிடந்த பெண்கள் அணியும் காலணி ஒரு ஜோடி, தாலிக்கொடி உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மர்ம நபர்கள் இளம்பெண்ணை ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துவந்து வன்கொடுமை செய்திருக்கலாம் என்றும், திடீரென்று அவர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் ஆரம்பத்தில் காவல்துறையினர் சந்தேகித்தனர்.      

 

கொலையுண்ட இளம்பெண் யார் என்று உடனடியாக தெரியாத நிலையில், செப். 24ம் தேதி காலை, இளைஞர் ஒருவர், தன்னுடைய காதல் மனைவியை கொன்று, பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாகச் சொல்லி, தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் சரணடைந்தார். அந்த இளைஞர், கர்நாடகா மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முரளிகிருஷ்ணன்(24) என்பதும், ஐ.டி. நிறுவன ஊழியர் என்பதும் தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோதுதான் கொலையுண்ட பெண் யார்? எதனால் கொல்லப்பட்டார்? என்பது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.      

 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் நம்மிடம் பேசினர். “கொலையுண்ட இளம்பெண், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் கம்போஸ் சாலையைச் சேர்ந்த கேசவராஜ் என்பவரின் மகள் கோகிலவாணி(21) என்பது தெரிய வந்தது. அவர், அரியானூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவப் படிப்பு படித்து வந்துள்ளார். முரளி கிருஷ்ணன்தான் கோகிலவாணியை கொன்று, எரித்ததாக ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டார். கோகிலவாணியின் தாய்வழி பாட்டி பெங்களூருவில் வசிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய தாயாரும், முரளி கிருஷ்ணனின் சித்தியும் பெங்களூருவில் உள்ள ஒரு துணி ஏற்றுமதி நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்து வந்தனர்.     

 

அப்போது ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் கோகிலவாணியின் தாயார், முரளி கிருஷ்ணனின் பெற்றோர், அவருடைய சித்தி குடும்பத்தாரை மேச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வரும்படி அழைத்து விடுத்தார். அதன்படி அவர்களும் வந்தனர். அந்த கோயிலில் வைத்துதான் கோகிலவாணியும், முரளி கிருஷ்ணனும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் தங்களுடைய அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டனர். அதன்பிறகு அவர்கள் தினமும் அலைபேசியில் பேசி வந்ததில், இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஒருகட்டத்தில் இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து, இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.  ஆனால் காதலில் உறுதியாக இருந்த அவர்கள், 18 மாதங்களுக்கு முன்பு, இருதரப்பு பெற்றோருக்கும் தெரியாமல் சேலத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.     

 

திருமணத்திற்குப் பிறகு காதலர்கள் எதுவும் நடக்காதது போல் அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர். வார இறுதி நாட்களில் முரளி கிருஷ்ணன் சேலத்திற்கு வந்து, கோகிலவாணியை ரகசியமாக சந்தித்து விட்டுச் செல்வார். சில நேரங்களில் அவரை கல்லூரிக்கு விடுப்பு எடுக்கச் சொல்லிவிட்டு, மோட்டார் சைக்கிளிலேயே பெங்களூருக்கு அழைத்துச் சென்று விடுதியில் அறை எடுத்து தனிமையிலும் இருந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, திடீரென்று காதல் கணவரான முரளி கிருஷ்ணனுடன் கோகிலவாணிக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. அவருடன்  பேசுவதையும், சந்திப்பதையும் தவிர்க்கத் தொடங்கினார்.   

 

இதற்கிடையே, கல்லூரியில் படித்து வரும் சக மாணவர் ஒருவரை கோகிலவாணி காதலித்து வந்ததாகவும், அதனாலேயே அவர் முரளி கிருஷ்ணனை வெறுக்கத் தொடங்கியதையும் காதல் கணவர் கண்டுபிடித்து விட்டாராம். புதிய காதலையும், பிற ஆண்களுடன் பேசுவதையும் உடனடியாக கைவிடுமாறு முரளி கிருஷ்ணன் எச்சரித்துள்ளார். இது, கோகிலவாணிக்கு  மேலும் வெறுப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அலைபேசியில் எப்போது பேசினாலும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான், சம்பவத்தன்று சேலம் வந்த முரளி கிருஷ்ணன், இருவருக்கும் இடையேயான பிரச்சனையை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்  கொள்ளலாம் என்று கூறி கோகிலவாணியை அழைத்துள்ளார். அவரும் கல்லூரியில் இருந்து வீட்டுக்குச் செல்லாமல், சேலம் புதிய புதிய பேருந்து நிலையம் வந்திறங்கினார். அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் முரளி கிருஷ்ணன் அவரை அழைத்துக்கொண்டு தீவட்டிப்பட்டி ஜோடுகுளி அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்கு சென்றார்.     

 

அங்கு சென்றபிறகும் இருவருக்குள்ளும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த முரளிகிருஷ்ணன், நான் உயிருடன் இருக்கும்போதே இன்னொருவனை பிடித்து விட்டாயா? எனக் கேட்டுள்ளார். அப்போது கோகிலவாணியோ, இனிமேல் நீ தேவை இல்லை என்று அலட்சியமாக கூறியதோடு, முரளி கிருஷ்ணன் கட்டிய தாலியையும் கழற்றி அவர் முகத்தில் வீசியெறிந்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோகிலவாணியை கழுத்திலேயே குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த கோகிலவாணி துடிதுடித்து இறந்தார். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவருடைய முகத்தை கல்லால் சிதைத்த முரளிகிருஷ்ணன், பின்னார் முகத்தில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார். மோட்டார்சைக்கிளில் இருந்து பெட்ரோலை பிடித்து முகத்தில் ஊற்றி தீ வைத்துள்ளார்.     

 

கையில் கத்தியுடன் வந்ததை பார்க்கையில் அவர் கொலை செய்யும் நோக்கத்துடன் வந்திருப்பது ஊர்ஜிதமாகிறது. இந்த சம்பவத்தில் வேறு  யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது,'' என்கிறார்கள் காவல்துறையினர். இதையடுத்து முரளி கிருஷ்ணனை கைது செய்த காவல்துறையினர், ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பெற்றோருக்குத் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்ட இளம்பெண், படுகொலை  செய்யப்பட்ட சம்பவம் ஜலகண்டாபுரம், ஓமலூர் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்