Skip to main content

“ஈஷா மையத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்” - மணியரசன் பேட்டி

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

Isha Center should be run by the government

 

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நேற்று (18.04.2021) மாலை சிதம்பரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். இதில் மாநிலம் முழுவதும் இருந்து கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். 

 

அதில் ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும், தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழ்வழி பூசையும், குடமுழுக்கும் நடைபெற வேண்டும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசனை தாக்க திட்டமிடும் நபர்களை கைது செய்ய வேண்டும், இந்து அறநிலையத்துறையைக் கலைத்திடக் கோரும் ஜக்கி வாசுதேவின் கோரிக்கையை மறுத்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் வரும் மே மாதம் 8ஆம் தேதி சனிக்கிழமை தஞ்சையில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

isha

 

இதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி பகுதியில் கட்டப்பட்டுள்ள ஈஷா மையத்தை அரசு ஏற்க வேண்டும், சட்ட விரோத காரியங்கள் அங்கு நடைபெறுவதால் மையத்தை அரசு கையகப்படுத்த வேண்டும். இந்து அறநிலையத்துறையின் கீழ் ஈஷா மையத்தை நிர்வாகம் செய்ய வேண்டும். ஜக்கி வாசுதேவ் ஆதரவாளர்களுக்கு கோவிலுக்குள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தது தவறான முன்னுதாரணமாகும். இதற்கு மூல காரணமாக விளங்குபவர் ஜக்கி வாசுதேவ். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும், சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்ய விரும்புபவர்கள் அவர்களுக்கு அர்ச்சனை செய்யலாம். மேலும் ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டு கோவில்களில் தமிழ்வழியில் பூசையும் குடமுழுக்கும் நடத்த வேண்டும். இந்து அறநிலையத்துறையைக் கலைத்துவிட வேண்டும் என்ற ஜக்கி வாசுதேவின் கோரிக்கையை ஏற்க மறுத்து அரசு அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் வருகிற மே 8ஆம் தேதி தஞ்சையில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. அதில் தமிழ் தேசிய பேரியக்கத்தினரும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும்.

 

Isha Center should be run by the government

 

ஜக்கி வாசுதேவ், ஈஷா அறக்கட்டளை சம்பந்தமாக பத்திரிகைகளில் செய்தி வெளியிட்ட ஒருங்கிணைப்பாளரான என் மீது ஜக்கி வாசுதேவ் அமைப்பைச் சேர்ந்தவர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் தொலைபேசியில் வன்முறையாக மிரட்டல் விடுத்து, எனது வீட்டை சுட்டிக்காட்டி தாக்குவதற்கு உள்நோக்கத்துடன் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈஷா யோகா மையம் தொடர்பான விவகாரம்; வெளியான பகீர் தகவல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Matter relating to Isha Yoga Centre; Released information

தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா தன்னார்வலராக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்களா என்று கேட்டதுடன் கடந்த 3 நாட்களாக கணேசன் ஈஷா யோகா மையத்திற்கு வரவில்லை என கூறினர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி  ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் பாரந்துறை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த பாரந்துறை காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காணாமல் போன தனது சகோதரர் கணேசனை மீட்டுத் தர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

Matter relating to Isha Yoga Centre; Released information

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜதிலக், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஈஷா மையத்தில் பணியாற்றியவர்களில் வெவ்வேறு தேதிகளில் தற்போது வரை 6 பேர் மாயமாகியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர். 

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.